Tamilnadu

பயணிகள் சிரமத்தைப் போக்க.. 'புகார் தீர்வு உதவி எண்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்த போக்குவரத்துத்துறை!

சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகள் குறை, 'புகார் தீர்வு உதவி எண்' மற்றும் 'பொது இணையதள வசதி' உள்ளிட்ட திட்டங்களைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு அதன் குறைகளைத் தெரிவிக்கவும், அரசு பேருந்துகளுடைய நிலை குறித்தும் தெரிந்து கொள்ளத் தனி குறைதீர் எண் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் இதனை அறிவித்திருந்தேன். அது இன்று முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் புகார் அளிக்க 1800 599 1500 என்ற தனி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பகுதிக்கு வரக்கூடிய பேருந்துகளின் நிலை குறித்தும், ஓட்டுநர் - நடத்துநரால் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்தும், பேருந்து பராமரிப்பு குறித்து என எந்த தகவல் என்றாலும் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளைப் பதிவு செய்து கொண்டு அதற்கு அடையாள எண் வழங்கப்படும். தொலைப்பேசிக்குக் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். அதற்குப் பிறகு அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்படும். விழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் இந்த எண்ணை அழைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதே போல www.arasubus.tn.gov.in என்ற தனி இணையதளமும் துவக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பேருந்துகளில் சிசிடிவி, பேனிக் பட்டன் வைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்காணிப்பதற்குப் பல்லவன் இல்லத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திலே இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

சென்னை, கும்பகோணம், திருநெல்வேலி என எதுவாக இருந்தாலும் இந்த ஒற்றை எண்ணில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிர்பயா நிதியின் கீழ் பேருந்துகளில் கேமரா வைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்த இணையதளத்தை எதிர்காலத்தில் செல்போன் செயலியாக மாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “RN.ரவியின் அதிகார மமதை.. 47 பேர் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்” : வைகோ கடும் கண்டனம் !