Tamilnadu

வசமாக சிக்க வைத்த ஒரு ட்வீட்.. விலங்குகள் நல வாரியம் விசாரணை நடத்த உத்தரவு: பீதியில் எச்.ராஜா!

பா.ஜ.க மூத்த தலைவராக இருப்பவர் எச். ராஜா. இவர் சமூகவலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு இணைய வாசிகளிடம் சிக்கிக் கொள்வது வழக்கம். மேலும் தவறான கருத்துக்களை பதிவிட்டுவிட்டால் அட்மின் மீது பழிபோட்டுவிட்டு தப்பித்துவிடுவார்.

இப்படிதான் கடந்த ஆண்டு பெரியார் சிலை குறித்து பதிவிட்டு, எதிர்ப்புகள் வலுத்த நிலையில், 'நான் பதிவிடவில்லை தனது அட்மின்தான் ட்விட்டரில் பதிவிட்டார்' என சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். இப்படி எப்போதும் ட்விட்டரில் சம்மந்தமே இல்லாமல் கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதைத் தனது வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

இந்நிலையில், எச். ராஜா கடந்த செப்.21ம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று அவரை கைது செய்யும் நிளைக்கு தற்போது தள்ளியுள்ளது. அந்தப் பதிவில், "எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒரு நாள் அதற்கு வெறிபிடித்து மாடு, கன்றுகளைக் கடிக்கத் தொடங்கியது.

நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் கல், மூங்கிலால் நாய் தலையில் அடித்தார். இதில் நாய் இறந்தது. இது வருத்தமாக உள்ளது. என்ன செய்வது" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுதான் இவருக்கு ஆபத்தாக தற்போது வந்துள்ளது.

இந்த பதிவை அடுத்து சமூக ஆர்வலர் ஸ்வப்னா சுந்தர் என்பவர் நாயைக் கொடூரமான முறையில் கொலை செய்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு இ - மெய் மூலம் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் பதில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு சிவகங்கை ஆட்சியருக்குத் தேசிய விலங்கு நல வாரியம் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் எச்.ராஜா விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், "எங்கள் வீட்டில் அப்படி ஒரு சம்பவம் ஏதுவும் நடக்கவில்லை. விசாரித்தால் விளக்கம் தரத் தயாராக இருப்பதாக" எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதனால் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகப் பொய் சொன்னாரா எச்.ராஜா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: இப்போது அல்ல, 2019-ல் மோடி தொடங்கிவைத்த போதே விபத்தான 'வந்தே பாரத்' ரயில்- வெளிவந்த அதிர்ச்சி தகவல் !