Tamilnadu

சாலை விபத்தில் காயமடைந்த பெண்.. தனது காரிலேயே மருத்துவமனையில் சேர்த்த மயிலாடுதுறை ஆட்சியர்!

நாகப்பட்டினம் மாவட்டம் அம்பல் காலனியைச் சேர்ந்த வினோத்குமார். இவர் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் 10 மாத கை குழந்தை சர்வேஸ் உடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது வழுவூர் அருகே பண்டாரவாடை என்னும் இடத்தில் அவருடைய இருசக்கர வாகனம் பழுதாகியதில் நிலை தடுமாறி மனைவி மற்றும் குழந்தையுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரது மனைவிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து குத்தாலம் தாலுகாவில் ஆய்வுப் பணிக்காக அவ்வழியே சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சாலை விபத்தில் காயமடைந்த தம்பதியினரைப் பார்த்துள்ளார்.

உடனே காரி நிறுத்திய அவர், தனது காரிலேயே வினோத் மற்றும் அவரது மனைவி குழந்தையை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு மருத்துவர்கள் காயமடைந்த தம்பதியினருக்குச் சிகிச்சை அளித்தனர்.

108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல் மாவட்ட ஆட்சியரின் வாகனத்தின் மூலம் முகத்தில் காயம் அடைந்த பெண்ணின் குடும்பத்தை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு அனைவரும் வாழ்த்திப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.. 11 ஆண்டுகள் கழித்து ரன்பீர் கபூருக்கு இந்துத்துவ கும்பல் எதிர்ப்பு!