Tamilnadu
பள்ளி நண்பனை கொலை செய்த கொடூரர்கள்.. 39 நாட்களுக்கு பின் கிடைத்த துப்பு ! கொலையாளிகள் சிக்கியது எப்படி ?
கடலுாரை அடுத்துள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது (40). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் சமீபத்தில் கடலுாரில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 23-ந் தேதி இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலும் அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார், விசாரணை நடத்திவந்தனர். அதேநேரம் செந்தில்குமாரின் உறவினர்கள் அவர் அடிக்கடி மதுகுடிக்க செல்லும் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்திற்கு சென்று தேடியுள்ளனர்.
அங்கு தலையில் கல்லை போட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில் கிடந்த செந்தில் குமாரின் சடலத்தை கண்டு போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் கொலை தொடர்பாக 1 மாதம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று 39 நாட்களுக்கு பிறகு சோரியாங்குப்பத்தில் இருந்த மதுபான கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது இருவர் சந்தேகப்படும் வகையில் மதுபானம் வாங்கி சென்றது தெரியவந்தது. உடனே அவர்கள் குறித்து குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அதே ஊரை சேர்ந்த கண்ணன், செல்வம் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் செந்தில் குமாரை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், பள்ளி நண்பர்களாக கண்ணன் செந்தில் குமார் இருவரும் பல முறை ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளனர்.
இதில் திடீரென கண்ணனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் செந்தில் குமாரை கடத்தி அவரின் தந்தையிடம் இருந்து பணம் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் செல்வம் என்பவரை கூட்டு சேர்த்துள்ளார்.
அவர்கள் திட்டப்படி சோரியாங்குப்பம் சென்று அங்கு மதுபானம் வாங்கி, யாரோ ஒருவரிடம் போன் வாங்கி செந்தில்குமாரை மதுபானம் அருந்த அழைத்துள்ளனர். அவர் வந்ததும் அங்கிருந்த காட்டுபகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
மதுபோதையில் செந்தில்குமாரின் போனை எடுத்து அவர் தந்தைக்கு போன் செய்ய முயன்றுள்ளனர். இவர்களின் திட்டத்தை அறிந்த செந்தில்குமார் அங்கிருந்த தப்ப முயன்றுள்ளார். அவர் தப்பினால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயந்த அவர்கள் செந்தில்குமாரின் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கண்ணன், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்த போலிஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!