Tamilnadu

இடைநீக்கம் செய்யப்பட்ட 4 MPக்கள் என்ன குற்றம் செய்தனர்?.. ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு MP கண்டனம்!

மக்களவையில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தியதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா கரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த உத்தரவுக்கு நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, "காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மக்களவையில் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபை நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற நடைமுறை மக்களவையில் இல்லாத ஒன்று. ஆனால் இன்று நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் அனைத்து கட்சி கூட்டத்திலும் சரி அவையிலும் சரி அக்னிபத் திட்டம், விலைவாசி உயர்வு, மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசவேண்டும் என்று கூறினோம். அதை தானே இன்று நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூறினார்கள். இன்று அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையின் இத்தகைய முடிவு ஜநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று. இதுபோன்ற நிலை ஒத்துவராது. தி.மு. க இந்த முடிவுக்கு தனது கடுமையான கண்டங்களை தெரிவித்து கொள்கிறது. இடைநீக்கம் செய்யும் அளவுக்கு பெரிய குற்றம் இல்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் இதுபோன்ற நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறார். சபாநாயகர் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார். நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் விலைவாசி உயர்வு விவகாரம் விவாதத்திற்கு எடுக்கமுடியவில்லை என கூறுகிறார்கள். நிர்மலா சீதாராமனை தவிர வேறு எந்த அமைச்சரும் இல்லையா?" என தெரிவித்துள்ளார்.

Also Read: விவசாய நிலத்தில் விழுந்து சுக்குநூறாக உடைந்த சிறிய விமானம்.. பதறியடித்து ஓடிவந்த கிராம மக்கள்!