Tamilnadu
“இது எங்க ஸ்கூல்..”: சொந்தக்காசில் வகுப்பறைக்கு பெயிண்ட் அடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்: குவியும் பாராட்டு!
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியை நோக்கி மாணவர்கள் படையெடுக்க முக்கிய காரணம், கொரோனா காலத்திலும், கல்வி கற்றுக்கொடுக்கும் முயற்சியில் சிறப்பாக செயலாற்றியதே!
அதுமட்டுமல்லாது, அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகவே இன்று தனியார் பள்ளிகளின் மீதான மோகம் குறைந்து, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருசில இடங்களில் ஆசிரியரை மிரட்டிவது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, மேசைகளை உடைப்பது போன்று வெளியான வீடியோக்களால், ‘அரசுப்பள்ளி என்றால் இப்படிதான்’ என்ற எண்ணத்தை பெற்றோரிடையே ஏற்படக் காரணமானது.
பலரும் கடும் கண்டனம் வெளியான அதேநேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் செய்திருக்கும் மற்றொரு செயல் தமிழகம் முழுவதும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்தப்பள்ளியின் தலைமையாசிரியர் சுதாகர் அப்பள்ளி ஆசிரியர்களை அழைத்து, “விரைவில் பொதுத்தேர்வு வரவிருப்பதால், வேறுப்பள்ளி மாணவர்கள் நம் பள்ளிக்கு தேர்வு எழுத வருவார்கள். எனவே வகுப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுவற்றில் உள்ள கிறுக்கல்களை முடிந்தவரை அழியுங்கள்” எனக் கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாணவர்களை வைத்து மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு இ பிரிவில் பயிலும் மாணவர்கள் சிலர் இந்தப் பணியை மேற்கொண்டு திருப்தி அடையாத நிலையில், ஒருபடி மேலேசென்று கையில் இருந்த பணத்தைச் சேர்த்து தங்கள் பயின்ற பள்ளி வகுப்பறைக்கு பெயிண்ட் அடித்துள்ளனர்.
வேலைக்கு ஆள் வைக்காமல் அக்கறையுடன் மாணவர்களே வெள்ளையடித்துள்ளனர். இதனை அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பெரும் பாராட்டுக்களை பெற்றதுடன், இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான தவறான கண்ணோட்டம் களையப்பட்டுள்ளதாகவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !