Tamilnadu
நாட்டுத் துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக் கொன்ற 2 பேர் கைது : வனத்துறை விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் வனத்துறையினர் ரோந்து சென்றபோது வனப்பகுதியில் ஆண் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் காட்டு யானை உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து வனத்துறையின் கால்நடை மருத்துவ குழுவினர் உதவியோடு உயிரிழந்த காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது காட்டு யானையின் தலையில் உலோக குண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காட்டுயானை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது என தெரியவந்ததை தொடர்ந்து, காட்டுயானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர்களை பிடிக்க வனத்துறையின் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வந்தது.
தீவிர விசாரணையில் ஆண் காட்டுயானையை கொன்றது 3 நபர்கள் என தெரியவந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட அஞ்செட்டி அருகேயுள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முத்து மற்றும் ஏழுமலையான் தொட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உரிமம் இல்லாத ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அஞ்செட்டி காப்புகாட்டுக்குள் முயல் வேட்டைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுயானை ஒன்று தங்களை துரத்தியது. இதனால் அச்சமடைந்து தங்களை காத்து கொள்ள காட்டுயானையை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !