Tamilnadu

“கால்நடை கடன் வட்டி தள்ளுபடி.. விவசாயிகளின் காவலனாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘தினகரன்’ நாளேடு !

“கால்நடை கடன் வட்டி தள்ளுபடி என்று முதல்வர் அறிவித்திருப்பதின் மூலம் விவசாயிகளின் காவலனாக திகழ்கிறார்” என `தினகரன்’ நாளேட்டின் தலையங்கத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

11.12.2021 தேதிய தினகரன் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-

கால் நடை துறையை மேம்படுத்தவும், கால்நடை துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உதவும் வகையிலும் ஒன்றிய அரசு சார்பில், மாநில அரசுகளுடன் இணைந்து, ‘கால்நடை உழவர் கடன் அட்டை’ திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பவர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ₹1.60 லட்சம் வரை கடன்தொகை பெறலாம். இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை ஒன்றிய அரசு மானியம் மூலம் வழங்குகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாக குறையும். கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டுக்கு ₹3 லட்சம் வரை கடனுதவி பெற முடியும். கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தையும் ஒன்றிய அரசும், மாநில அரசும் அமல்படுத்தியுள்ளன. இதன்படி, வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 70 சதவீத மானியம் காப்பீடாக வழங்கப்படுகிறது.

தமிழக விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், கடன்தொகையை முறையாக திருப்பிச்செலுத்தும் விவசாயிகளுக்கு கால்நடை கடன் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதன கடனை திருப்பிச்செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டி ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவு சங்கம், வங்கிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது அரசாணையாக வெளிவந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகளுக்கு, தோள் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், தினம் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். தற்போது, விவசாயிகளையும் கைவிடாமல், கால்நடை கடனுக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடியபோது, அவர்களுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது விவசாயிகளின் காவலனாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு என்பதை நாடு மறக்காது. தன்னால் முடிந்த அளவையும் மீறி, கூடுதலாக தமிழக மக்களுக்காக முதல்வர் பாடுபட்டு வருகிறார் என மதுரை ஐகோர்ட் கிளை நேற்று முன்தினம் பாராட்டு தெரிவித்தது. அதற்கு சான்றாக, தமிழக அரசின் கால்நடை கடன் வட்டி தள்ளுபடி அறிவிப்பு அமைந்துள்ளது.

Also Read: தந்தை இறுதிச் சடங்கில் மகளும் உயிரிழப்பு.. ஒரேநாளில் நடந்த சோகம் - என்ன நடந்தது?