Tamilnadu

இனி திடீர் ஆய்வு, சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் - சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு : எதற்காக தெரியுமா?

பெருமழை காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பையால் வெள்ளநீர் வெளியேற்ற ஏற்பட்ட சிரமத்தையடுத்து வருங்காலத்தில் தடுக்கவும், தமிழ்நாடு அரசின், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்லவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, மறுசுழற்சி செய்ய இயலாத, பயன்படுத்திய பிறகு தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு அரசு தடை விதித்தது.

இந்நிலையில் தடைவிதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாடு கொரோனா பெருந்தொற்று காலத்தில் பார்சல் முறையின் காரணமாக மீண்டும் பெரியளவில் பழக்கத்திற்கு வந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் பெய்த பருவமழையின் போது பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து வெள்ளநீர் வெளியேற முடியாமல் நகருக்குள் தண்ணீர் தேங்கியது. இது போல் வருங்காலத்தில் ஏற்படாமல் தடுக்கவும், பிளாஸ்டிக் தடையினை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனையில் தீவிரமாக இறங்கினர். அதன்படி ஆகஸ்ட் 19 முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 13 ஆயிரத்து 632 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4226 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தி வந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் சென்னையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த, திடீர் ஆய்வுகள், தீவிர சோதனைகள் மேற்கொள்ளவும், சென்னை மாநகராட்சி அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்த்து பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Also Read: ”திருமணம் ரத்தான போதும் விருந்தினர்களை உபசரித்து அனுப்பிய பெற்றோர்” - வேலூரில் நடந்த ருசிகர நிகழ்வு!