Tamilnadu

திருப்பூரில் ரூ.41.24 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர்!

திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2021) திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 41.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்

அதனைத் தொடர்ந்து, எரிசக்தித் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 திட்டப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டிய புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குண்டடம் வட்டாரம், கொழுமங்குழியில் 24 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் மற்றும் தாராபுரம் வட்டம், மாம்பாடி ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தில் 16 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம், என மொத்தம் 41.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.


பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூகநலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில் 4,335 பயனாளிகளுக்கு 55.61 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்
சு.முத்துசாமி, ஊரக தொழிற்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன், ஆ. ராசா, அ. கணேசமூர்த்தி, கு. சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.வினீத், இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Also Read: “அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்...எந்த வேறுபாடும் கிடையாது” - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!