Tamilnadu

“1 லட்சம் மின்கம்பங்கள் தயார்.. தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : செந்தில்பாலாஜி !

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்துப் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதையடுத்து சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அரசு ஊழியர்கள் மின்மோட்டர்களை கொண்டு அகற்றி வருகிறார்கள்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மழைக் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் விரைந்து சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் ஒரு துணை மின் நிலையத்தில் மட்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாகச் சேதமடையும் மின் கம்பங்களை உடனே மாற்றுவதற்காக ஒரு லட்சம் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில், மழைநீர் அகற்றப்பட்டு விரைந்து மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு வருகிறார். வேறு எந்த உதவி வேண்டும் என்றாலும் அரசால் அறிவிக்கப்பட்ட இலவச உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Also Read: "மழை, வெள்ளம் இருந்தாலும் தடையின்றி பேருந்துகள் இயங்கும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!