Tamilnadu
“எனது உற்ற நண்பர்... பொதுவாழ்வில் நேர்மையின் இலக்கணம்” : நன்மாறன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
மேடைக் கலைவாணர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகியும், இருமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவருமான என்.நன்மாறன் இன்று காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “எனது உற்ற நண்பரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் அவர்கள் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்திகேட்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏழை - எளிய மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்தவர். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 10 ஆண்டுகளும் நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
கொள்கைப் பிடிப்பு மிகுந்த அவரது அரசியல் ஆளுமை, மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அயராது உழைக்கும் அவரது அப்பழுக்கற்ற சமூகப்பணி ஆகிய இரண்டையும் நேரில் கண்டிருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு ஒரு கடிதம் எழுதி, “இந்தியா முழுவதும் பிற்போக்கு தலைவிரித்தாடும்போது, தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது” என்றும், “நூறு நாள் ஆட்சி 100-க்கு 100 மார்க்” என்றும் பாராட்டியிருந்தார்.
அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு - அவரை அலைபேசியில் நானே தொடர்புகொண்டு பேசினேன். அன்று என்னிடம் அதே பழைய பாசத்துடனும் - நட்புடனும் உரையாடினார்.
அலைபேசியில் நான் கேட்ட அவரது குரல் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கையில் - திடீர் உடல் நலக்குறைவால் அவர் மறைவெய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது பேரதிர்ச்சியளிக்கிறது. இன்றைய தலைமுறையும் - எதிர்காலத் தலைமுறையும் ஒரு மதிப்புமிக்க “மாதிரி மக்கள் பிரதிநிதியை” இழந்து தவிக்கிறது.
பொதுவாழ்வில் நேர்மையின் இலக்கணமாகவும் - எளிமையின் சிகரமாகவும் விளங்கிய நன்மாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !