Tamilnadu

“கரடி வேடத்தில் வந்து நகை கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய மூதாட்டி” : விசாரணையில் அம்பலமானது உண்மை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் உள்ள ஆவுடையம்மாள்பரம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி அம்மாள். இவர் புதன்கிழமை இரவு வீட்டில் தனிமையில் இருந்த போது தசரா பண்டிகைக்கு வேடம் அணிந்து பக்தர்கள் போல் கரடி வேடம் அணிந்து வந்த சிலர் தன்னை கட்டிப் போட்டுவிட்டு மயக்க ஊசி செலுத்தி, 6 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக அவசர போலிஸ் எண் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார் பார்வதி அம்மாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்வதி அம்மாளுக்கு மயக்க ஊசி செலுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனால் குழம்பிப்போன போலிஸார் பார்வதி அம்மாளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பார்வதி அம்மாள் தனது தம்பிக்கு உதவி செய்வதற்காக கொள்ளைச் சம்பவம் போல் நாடகம் அரங்கேற்றி அதில் நடித்ததும், தனது மருமகள் இசக்கியம்மாளின் நகைகளை திருடி அதனை தனது தம்பி வரதராஜனிடம் கொடுத்து அனுப்பியதும், அவசர போலிஸ் 100 நம்பருக்கு போன் செய்து கொள்ளை நடைபெற்றதாக போலிஸாரிடன் பொய் கூறியதும் அம்பலமானது.

இதையடுத்து 55 வயதான பார்வதி அம்மாளை, காவல் ஆய்வாளர் பத்மாவதி, காவல் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி, தலைமைக் காவலர் ஜெயபால், உள்ளிட்டோர் பார்வதி அம்மாளை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “2 முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பி ஓடிய T23 புலி” : மசினக்குடி காட்டில் இரவில் நடந்த ‘திகில்’ சம்பவம்!