தமிழ்நாடு

“2 முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பி ஓடிய T23 புலி” : மசினக்குடி காட்டில் இரவில் நடந்த ‘திகில்’ சம்பவம்!

20 நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி தெப்பக்காடு மசினகுடி சாலையில் நேற்று இரவு தென்பட்ட உடன் 2 முறை மயக்க ஊசி செலுத்திய நிலையில் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

“2 முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பி ஓடிய T23 புலி” : மசினக்குடி காட்டில் இரவில் நடந்த ‘திகில்’ சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் தேவாலா பகுதிகளில் 4 பேரை அடித்து கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 20வது நாட்களாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் போராடி வருகின்றனர். 12 வயது மதிக்கதக்க அந்த புலி மசினகுடி வனபகுதிக்கும் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கும் மாறி  மாறி சென்று வருகிறது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், 5 கால்நடை மருத்துவர்கள்,  கேரளா வனத்துறையினர், 3 மோப்பநாய்கள், அதிரடி படையினர் என ஏராளமானோர் இரவும் பகலாக தேடி வருகின்றனர். கடந்த 6-ந்தேதி சிங்காரா வன பகுதியில் அந்த புலி தென்பட்ட போது அடர்ந்த வனபகுதி என்பதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் போனது. எனவே 145 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் T23 கண்காணிக்கபட்டது. நேற்று முன்தினம் தேவன் எஸ்டேட் அருகே போஸ்பரா பகுதியில் அந்த புலியின் உருவம் பதிவான நிலையில் ஓடக்கொல்லி பகுதியில் வனத்துறையினர் தேடினர். ஆனால் புலி தென்படாத நிலையில் நேற்று காலை கார்குடி பகுதிக்கு வந்தது. 

பின்னர் இரவு 9.45 மணி அளவில் தெப்பக்காட்டிலிருந்து மசினகுடிக்கு வரும் நெடுஞ்சாலையில் T23 புலி நடந்து வந்தது. அதனை சில வாகன ஓட்டிகள் பார்த்து வீடியோ எடுத்த நிலையில் அங்கு கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறையினர் 4 முறை மயக்க ஊசி செலுத்தினர். அதில் 2 மயக்க ஊசிகள் புலியின் மீது பட்டுள்ளது. மயக்க ஊசி பட்டவுடன் அந்த புலி அடர்ந்த வன பகுதிக்குள் தப்பி ஓடியது. அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அந்த புலியை தேடும் பணியில் தொடர்ந்து 3 மணி நேரமாக தேடினர்.

ஆனால் இரவு நேரம் என்பதால் புலி மயங்கி விழுந்த இடத்தை கண்டறிய முடியவில்லை. அவர்களுக்கு உதவியாக 2 கும்கி யானைகளும் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டன. தேடுதல் பணி தோல்வியடைந்ததையடுத்து 1.30 மணி அளவில் அனைவரும் தேடுதல் பணியை கைவிட்டு வெளியில் வந்தனர்.இருப்பினும் மீண்டும் நாளை காலை 6 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட பகுதியில் வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டை நடத்த உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் .

banner

Related Stories

Related Stories