Tamilnadu

“குறைகளை உடனடியாக தீருங்கள்; என்ன தேவையென்றாலும் கேளுங்கள்”: அதிகாரிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி "மின்னகம்"மின்நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்து இன்று (08.10.2021) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான மின் சேவையை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கடந்த 20.06.2021 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் "மின்னகம்" மின்நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்தார்கள்.

20.06.2021 முதல் 07.10.2021 வரை மின்னகத்தில் 3,83,563 புகார்கள் பெறப்பட்டு அதில் 3,77,219 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி மின்னகத்தில் மின்நுகர்வோர்களால் பெறப்பட்ட புகார்களின் மீது 98 சதவீதம் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக பணிபுரிகின்ற அனைத்து நிலை அலுவலர்களுக்கும் எனது பராட்டுகளும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மின்னகம் ஜூன் மாதம் 11 நாட்களில் 28,124 புகார்களும், ஜீலை மாதம் 96,097 புகார்களும், ஆகஸ்ட் மாதம் 60,486 புகார்களும் மற்றும் 01.10.2021 முதல் 07.10.2021 வரை 7 நாட்கள் 15,783 புகார்களும் வரப்பெற்றது. தற்போது துறையினரால் மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகளால் வரப்பெறும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

மேலும், அனைத்து நிலை அலுவலர்களும் தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றி, தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் நற்பெயரை ஏற்படுத்தும் துறையாக மின்சாரத்துறை விளங்கவேண்டும்.

மின்னகத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அந்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துரிதமாக செயல்பட வேண்டும். மின்னகத்திலிருந்து உதவிப் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் புகார்களை பெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பெறப்படும் புகார்கள் உங்கள் பகுதி அல்லாதவையாக இருப்பின் உடனடியாக மின்னகத்திற்கும், சம்மந்தப்பட்ட பகுதி அதிகாரியுடன் அதனை உடனடியாக பகிர்ந்து புகார்களுக்கு தீர்வுகாண வேண்டும். புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறை நிவர்த்தி செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் வாயிலாக உரிய அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

அனைத்து நிலை அலுவலர்களும் நாம் செய்யும் பணிகளில் என்றும் தவறக்கூடாது. தங்களுடைய கடமைகளிலிருந்து தவறக்கூடாது. ஒவ்வொரு நாளும் வரும் புகார்களை உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து புகார்கள் வரும் பகுதிகளில் நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகளை ஆய்வு செய்து, வரும் புகார்களின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். புகார்களை நிவர்த்தி செய்ய உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உடனடியாக உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். புகார்களை நிவர்த்தி செய்ய தளவாட பொருட்கள் தேவைப்படின் அதுகுறித்த விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். எவ்வித தடையுமின்றி விரைவாக தேவைப்படும் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தினசரிப் பணிகள் குறித்த விபரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையதளத்தில் தினமும் தவறாது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மின்நுகர்வோர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகள் குறித்து அறிக்கைகள் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்படி பத்திரிகை மற்றும் சமூகவலைதளங்களுக்கு பத்திரிகை செய்திகள் மூலம் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், செய்தித்தாள் மற்றும் சமூக வலைத்தளங்களில் துறை சார்ந்து வெளியாகும் செய்திகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான விளக்கத்தையும் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” எனப் பேசினார்.

Also Read: “திருவாரூர் மண்ணிலிருந்து கிளம்பி திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் பிறைசூடன்” : முதல்வர் இரங்கல்!