Tamilnadu

தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இதுதான் வித்தியாசம் : கடந்தாண்டு டிரான்ஸ்ஃபர்.. இந்தாண்டு உறுதிமொழி!

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நடைபெற்றது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

கடந்தாண்டு செப்டம்பர் 17 அன்று, தந்தை பெரியார் சிலைக்கு, கடலூர் காவல்நிலையக் காவலர்களான ரங்கராஜன், ரஞ்சித், அசோக் ஆகியோர் கருப்புச்சட்டை அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதன் காரணமாக மூவரையும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தார் கடலூர் மாவட்ட எஸ்.பி.

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கல்வி கற்று, வேலைவாய்ப்பினைப் பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்திட வேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி.ரவிக்குமார் கோரிக்கையின் பேரில் 3 காவலர்களும் மீண்டும் கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செய்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சியில் அதே காவல்துறையினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: “தென்னை மர விவசாயிகள் மோடி அரசை மன்னிக்க மாட்டார்கள்” : GST கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம்!