Tamilnadu

“நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வார்” : அ.தி.மு.க துணைத் தலைவர் மீது ஊராட்சித் தலைவி பரபரப்பு புகார்!

சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியில் உள்ள மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேகலா தேவேந்திரன் என்ற பெண், ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அங்கு துணைத்தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த அருண் குமார் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.கவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அருண்குமார், தேர்தலில் வாக்கு பெட்டியை உடைத்து செல்லாத வாக்குகளை செல்லும் வாக்குகளாக மாற்றி அறிவிக்க கோரி அராஜகத்தில் ஈடுபட்டு துணைத் தலைவராக பதவியேற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊராட்சி பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணி செய்ய விடாமலும் அவர்களை மிரட்டி அச்சுறுத்தி வருகிறார். பெண் ஊராட்சி மன்ற தலைவர் என்று கூட பாராமல் பலமுறை ஆவேசமாகவும் நாகரீகமற்ற முறையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்துள்ளார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்றைய தினம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் மேகலா தேவேந்திரன், அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரின் கணவருக்கு உயிர் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவரிடம் நேரில் சந்தித்து மனு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், “அ.தி.மு.க ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள அருண்குமார், தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வாக்கு எண்ணும் அறையில் செல்லாத வாக்குகளை தனது கணக்கில் சேர்த்து வெற்றி பெற்ற நபர்.

தற்போது ஊராட்சி பகுதியில் பணிகளையும் செய்ய விடாமல் அனைவரையும் அச்சுறுத்தும் தொனியில் மிரட்டி வருகிறார். இதனால், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து, இவரின் பதவியை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மக்கள் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் PTR - ப.சிதம்பரம் ட்வீட்