Tamilnadu

தரமான உணவுகள் கூட கிடைக்காத நிலையில் இந்திய வீரர்கள் - ஒலிம்பிக் பதக்கம் உணர்த்தும் பாடம் என்ன?: முரசொலி!

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 11, 2021) தலையங்கம் வருமாறு:

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு உலகத் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. 113 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் பதக்கம் பெற்ற நாடுகளில் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன. வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள். அந்த நாடுகளும் வாழ்த்துகளுக்கு உரியவை!

இந்தியா 48 ஆவது இடத்தையே பெற்றுள்ளது. முதல் பத்து இடத்தை நோக்கி முன்னேறும் நாடுகளில் முதலாவது நாடாக இந்தியா அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவும், எண்ணமாகவும் இருக்க முடியும். இருக்க வேண்டும்! ஒரு தங்கப்பதக்கம் உள்பட ஏழு பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மீராபாய் சானு, எடை தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், ரவிக்குமார் தாஹியா உலகச் சேம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும், பேட்மிட்டன் விளையாட்டில் பி.வி.சிந்து உலகச் சேம்பியன் பட்டத்தையும், லவ்லினா போர் கோஹைன் குத்துச்சண்டையில் வெண்கலமும், குத்துச்சண்டையில் பஜ்ரங் பூனியா வெண்கலத்தையும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறது. இதன் மூலம் இந்திய நாட்டுக்கே மரியாதையைச் சேர்த்துள்ளார்கள் இவர்கள்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி அதிகப் பதக்கங்கள் பெற்ற போட்டி இதுதான். இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்போட்டிகளில் 6 பதக்கங்களைப் பெற்றோம். அடுத்த முன்னேற்றம் இது. இறுதி நாளில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டார் நீரஜ் சோப்ரா.

42 ஆண்டுகள் கழித்து ஹாக்கியில் பதக்கம் வாங்கி இருக்கிறது இந்திய அணி. ஒரு காலத்தில் 8 பதக்கங்களை வாங்கிய அணியாக அது இருந்தது. இழந்த அந்தப் பெருமையை மீட்டெடுத்துள்ளது ஹாக்கி அணி. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியா, தோல்வியா என்பதைத் தாண்டிய ஒன்று இருக்கிறது. அது தான் பங்கேற்பு. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுப்பது என்பதே மிகப்பெரிய சாதனை தான்.

ஒலிம்பிக் களத்தில் கால் வைத்ததே இவர்களது மிகப்பெரிய சாதனைதான். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கத் தேர்வு செய்யப்படுவதும் சாதனையே. வாள் வீச்சு போட்டியில் பங்கேற்க இதுவரை இந்தியா தகுதி பெற்றதே இல்லை. முதன் முறையாக இந்தியா சார்பில் பவானி தேவி பங்கேற்றார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதேபோல் படகு ஓட்டும் போட்டியில் பங்கேற்ற நேத்ரா குமணனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் விளையாட 26 பேர் கொண்ட இந்திய தடகள அணியில், தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இடம் பிடித்திருந்தனர். இந்த ஐந்து பேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மூன்று பேர் பெண்கள். இவர்களால் பதக்கம் பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்களது திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு போட்டிகளுக்கு முன்னதாகவே ஊக்கப் பரிசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் செல்லும் அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

போட்டிக்குச் செல்லும் வீரர்களுடன் காணொலி காட்சி மூலமாக உரையாடிய முதலமைச்சர், “நீங்கள் இப்போது டோக்கியோ செல்ல இருக்கிறீர்கள். நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்துக்குத் தெரியும். ஆனால், இந்த இடத்தை அடைவதற்காக நீங்கள் இதுவரை எடுத்துக் கொண்ட பயிற்சிகள், அடைந்த துயரங்கள், வேதனைகள் ஆகியவற்றை இந்த உலகம் அறியாது. பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்வாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த வெறியும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும் தான் உங்களை இந்த இடத்துக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

ஷூ வாங்குவதற்குக் கூட பணமில்லாமல் தரமான உணவுகள் கூட கிடைக்காமல் உங்களில் சிலர் பயிற்சி பெற்றுவந்துள்ளீர்கள். இத்தகைய பொருளாதாரத் தடைகள் இனி இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும். விளையாட்டில் திறமையுள்ள மாணவ, மாணவியருக்கு அவர்களது வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது” என்று சொன்னார். இது போன்ற முயற்சிகளை தமிழ்நாடு அரசு மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் முனைந்து செய்யுமானால் பதக்கப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியா அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் எட்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

விளையாட்டு என்பது ஆர்வம், விடாமுயற்சி, திறமை ஆகியவற்றோடு முடிந்துவிடவில்லை. பயிற்சி, தனித்திறமைகள், உலகப் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வலிமை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். அத்தகைய பயிற்சியானது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் கிடைப்பது இல்லை. அத்தகைய பயிற்சி கிடைத்தவர்கள் மட்டுமே, உலகப் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கெடுக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாடும் விரைவில் மாறவேண்டும். முதலமைச்சரின் அறிவிப்புகள் இத்தகைய முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும். அமைய வேண்டும்.

Also Read: 80வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'முரசொலி' : “கலைஞர் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!