Tamilnadu

“மாற்றுத்திறனாளி மாணவிக்கு செல்போன்.. வீட்டிற்கே சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்” : குவியும் பாராட்டு!

தமிழ்நாட்டில், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. வறுமை மற்றும் செல்போன் வாங்க வசதியின்மை காரணமாக மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உதவியாக குழந்தை தொழிலாளர்களாகவும் மாறி வருகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு தலைமை ஆசிரியராக சங்கர்குமார் பணியாற்றி வருகின்றனர். மேலும் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த ஆசிரியர்கள் வீடு,வீடாகச் சென்று மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து மாணவர்களை கல்வி கற்கச் செய்கின்றனர்.

ஆரம்பத்தில் இப்பள்ளியில் குறைந்த அளவே மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தற்போது 47 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்காததால் பெரும்பாலான மாணவர்கள் வேலைக்கு செல்லும் நிலையில் இருக்க, இதனையறிந்த ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு, மட்டுமல்லாமல் விருப்பப்படும் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து பள்ளியில் உள்ள எல்இடி டிவியில் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் பார்க்க வைத்து பாடங்களை சொல்லி கொடுக்கின்றனர்.

மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து கல்வித் தொலைக்காட்சி பார்ப்பதுடன் ஆசிரியர்களிடம் பாடங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து படித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது முக கவசம், அணிந்து சமூக இடைவெளியுடன் கல்வி தொலைக்காட்சியை பார்க்கின்றனர். மேலும் ஆசிரியர்கள் தங்கள் செல்போன் மூலமும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் ஆசிரியர்களை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதே பள்ளியில் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் அருகில் உள்ள குமாரகிரிகிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி மஞ்சுளா சேர்ந்துள்ளார். அவர் படிக்கும் ஆர்வத்தை தெரிந்து கொண்ட தலைமையாசிரியர் சங்கரகுமார் பள்ளிகளில் சேர்த்ததுடன் மாணவியின் நிலையை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி பரிமளாவிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அதிகாரி பரிமளா நேரடியாக குமாரகிரிக்கு மாணவின் வீட்டிற்கு சென்று செல்போன் வாங்கிக் கொடுத்ததுடன் இந்த மாணவிக்கு வீட்டில் வந்து ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார் மேலும் அந்த மாணவியை நன்கு படித்து நல்ல வேலைக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தந்தையை இழந்த மாணவி மஞ்சுளா தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதால் அரசு தனது மேல் படிப்புக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read: முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !