Tamilnadu

நூற்றாண்டு பழமையான கோயில்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்.. அசத்தும் அறநிலையத்துறை - குவியும் பாராட்டு!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிதிலமடைந்த கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நிதி வசதிமிக்க கோயில்களில் இருந்து ஆவணம் தயாரிக்கும் திட்டப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க அனுமதி அளித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு:

“மிகவும் சிதிலமடைந்த பழமையான கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு நிதி வசதியில்லாத கோயில்களுக்கு ஆணையர் பொதுநல நிதியில் இருந்து வழங்க வேண்டி சார்நிலை அலுவலர்களால் முன்மொழிவு சமர்பிக்கப்பட்டு வருகிறது.

தொன்மையான சிதிலமடைந்த கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டப் பணிக்கு காலதாமதம் ஏற்படுவதாலும், அக்கோயில்களின் நிலை மேலும் பாதிக்கக்கூடும் என்பதாலும், அதை தவிர்க்கும் பொருட்டு தங்களது சரகத்திற்கு உட்பட்ட நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து நிதிவசதியில்லாத கோயில்களில் இப்பணியை மேற்கொள்ள நிதியுதவி வழங்க இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இப்பணிக்காக நிதி வசதியில்லாத கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகையினை நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து துறையின் விதிகளுக்குட்பட்டு உரிய வழியில் விடுவித்து பின்னர் ஆணையருக்கு முன்மொழிவு சமர்ப்பித்து ஆணையர் பொதுநல நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: துப்புக்கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது : பெற்றோர் தலைமறைவு!