Tamilnadu

H ராஜா தலைமறைவு என போலிஸ் குற்றப்பத்திரிகை சமர்பிப்பு; ஐகோர்ட்டை திட்டிய விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் ஆணை!

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவில், ஹெச்.ராஜா-விற்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமர்ப்பிக்க உத்தரவு.

முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில்

என் மீதும் பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.

Also Read: “கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார் எச்.ராஜா” - சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம்!

தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற பத்திரிக்கையில் நான் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 23ல் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்."என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர் மனுதாரரான தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த துரைச்சாமி ஹெச்.ராஜா-விற்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மனுதாரர் "தலைமறைவு" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் "சம்மன்"அல்லது "வாரண்டு " அனுப்பியதா என கேள்வி ஏழுப்பி மனுதாரருக்கு அனுப்பப்பட்ட கீழமை நீதிமன்ற சம்மனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also Read: வேட்புமனு தாக்கல் செய்யவந்த பெண்ணின் சேலையை இழுத்து அட்டூழியம் செய்த பாஜக தொண்டர்கள்:யோகி அரசின் அராஜகம்!