Tamilnadu
“அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.
பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு 137 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக குழந்தைகள் வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய சுகாதார இயக்க நலக்குழும இயக்குனர் தாரேஷ் அகமது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, மாங்குடி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 137 படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான பிரத்யேக வார்டு திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களை புதுப்பித்து தரவேண்டும் எனக் கோரியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் தேவை என்பதை மாவட்ட ஆட்சியர் வரைவு தயாரித்து விரைவில் துறைக்கு அனுப்பிய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஒட்டுமொத்தமாக 10,839 சுகாதார மையங்களை மேம்படுத்த, உபகரணங்களை வாங்க கூடுதலாக ரூ.4279 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
மேலும், நாகர்கோவிலில் ஜிகா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, மகப்பேறு முடிந்து குழந்தையும் தாயும் நலமாக இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
மேலும் பேசிய அவர், “அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. விரைவில் தமிழ்நாடே மகிழ்ச்சி அடையும் வகையில் சர்வதேச அளவில் பிரமாண்டமான மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோன்று மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மக்கள் நல்வாழ்வுத் துறையின் அலுவலர்கள் வீடுதோறும் சென்று மருத்துவ சோதனைகளைச் செய்து சிகிச்சைகளை வழங்குவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!