Tamilnadu

“நீட் தேர்வை தமிழ்நாட்டில் நடத்த அனுமதிக்க மாட்டோம்” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு, நடப்பு கல்வியாண்டிற்காகப் பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,”ஜூலை 31-ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு உள்ளதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் குறைவாக இருந்தால் கூட அந்த தனித்தேர்வுகளிலும் மாணவர்கள் எழுதலாம். இது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தால் சாத்தியம். இல்லையென்றால் அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதன்படி செயல்படும்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயிண்ட்ராகவும் வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வருகின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு முதலமைச்சரிடம் இது குறித்து பேச உள்ளேன். நீட் தேர்வை தமிழ்நாட்டில் நடத்த விடமாட்டோம். அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது; மாதாந்திர பணிகள் மட்டுமே நடைபெறும்”: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!