Tamilnadu
“மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்தை தி.மு.க நிச்சயம் தடுக்கும்” : தயாநிதி மாறன் எம்.பி உறுதி!
மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு தி.மு.க வலுவான எதிர்ப்பை தெரிவித்து தடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி, “கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவர முதலமைச்சர் அறிவுறுத்தியதுபோல் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும். முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும்.
மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே அனுமதி வழங்கக்கூடாது என்று ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் செயல்படுகிறது. நிச்சயமாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுப்பார்கள்” என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் அனைத்துமே ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. இதேபோல் நாடாளுமன்றத்திலும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இதே கோரிக்கைகளை முன்வைத்து எல்லா விதமான முயற்சிகளையும் எடுப்போம்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். விவசாயமும் விவசாயிகளும் பாதிக்கப்படும் காரணத்தால் இந்த விவகாரத்திலும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுத்து அவை நடைபெற விடாமல் தடுத்து நிறுத்துவோம்.
10 ஆண்டுகளாக பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி கஜானாவை காலி செய்து கிட்டத்தட்ட 60 லட்சம் கோடி ரூபாய் வரை கடன்களை அ.தி.மு.க அரசு விட்டுச்சென்றுள்ளது. ஆனால் தி.மு.க சொன்னதுபோல் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் 14 வகையான சிறப்பு தொகுப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி உள்ளது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிலுவை தொகையினை தர மறுக்கிறது. அதையும் நிச்சயமாக மீட்டெடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”