Tamilnadu

குழந்தைகளுக்கென 3,500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.. 3வது அலையை எதிர்கொள்ள தயார்: ராதாகிருஷ்ணன் !

சென்னை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியோடு 250 படுக்கைகள் தயாராக உள்ளன. இதனை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கைகள் குழந்தைகளுக்காக தயாராக உள்ளன. கொரோனா மூன்றாவது அலையை பொறுத்தவரை குழந்தைகளுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும் என உறுதியாக கூறமுடியாது.

இரண்டாம் அலையிலேயே ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். அதேநேரம் குழந்தைகளின் பெற்றோர் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பத்தாயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் எந்த நேரமும் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கூடியதாக தயார் நிலையில் உள்ளன.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான கட்டமைப்போடு, தமிழ்நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி செயல்பட்டு வருகிறோம்.

அரசு அறிவித்துள்ள தளர்வுகளை முறையாக பின்பற்றி பொதுமக்கள் தொற்று பரவலை தடுக்க உதவ வேண்டும். விதிகளை பின்பற்றி அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், “கோயம்பேடு காய்கறி வணிகர்கள், காசிமேடு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சிறப்பான முறையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல தடுப்பூசி முகாம்களை நடத்த மற்ற வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் அணுகலாம். முகாம் நடத்த மாநகராட்சி தயாராக உள்ளது.

சென்னையில் நடைபெறும் திருமணங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளோம். கூட்டமாக கூடுவது கொரோனா பரவலை அதிகப்படுத்தும் என்பதால் அதை தடுக்கும் முயற்சிக்கு மக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பேருந்து சேவைக்கு அனுமதி: ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!