Tamilnadu

“கொரோனா பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டாம்” : வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி !

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் உடனான ஆய்வுக்கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கையில் ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கைகள் போதிய அளவில் இருப்பதால் பெரிய அளவில் மக்கள் பதட்டமடைய தேவையில்லை.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அளவிலான உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அளவிலான உயர் மட்ட குழு அமைக்க அவசியம் இல்லை; தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் குழு அமைத்து பல சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கொரோனா பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டாம். முடிந்தால் தமிழகத்தின் கூடுதல் தேவைகளை மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தர வேண்டும் என வானதி சீனிவாசனுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

அதேபோல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது என ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை குற்றம் குறை சொல்ல வேண்டாம், குற்றத்தை சுட்டிக் காட்டவும் வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

காபந்து முதல்ராக எடப்பாடி பழனிசாமி இருந்த 7ம் தேதி வரை 250 மெட்ரிக் டன் கையிருப்பு இருந்தது. தொற்று உயரும் நிலையில், 575 மெட்ரிக் டன் நாள் ஒன்றுக்கு தேவைப்பட்டது. 250 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வைத்து கொண்டு ஒரு திறமையான நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் தற்போது 650 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறியது போல், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம். மக்கள் நலனை அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது வரை 256 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் மட்ட மருத்துவ வல்லுநர் குழு மூலம் நாளை கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது குறித்து ஆராய்ச்சி நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் தொற்றில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு சென்னையிலிருந்து உரிய முறையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘தெரியாம சொல்லிட்டேன்’ : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட குட்டி சாவர்க்கர் ஹெச்.ராஜா!