Tamilnadu
“பொதுமக்கள் இனியாவது உணரவேண்டும்.. உயிர்களைக் காக்கவே முழு ஊரடங்கு” : தினகரன் தலையங்கம்!
உயிர்களைக் காக்கவே முழு ஊரடங்கு என்பதை பொதுமக்கள் இனியாவது உணர வேண்டும் என்று ‘தினகரன்’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-
கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்தியாவே சிக்கி பரிதவித்து வருகிறது. தொற்று பரவல் சங்கிலியை துண்டித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி ஊரடங்குதான் என்பது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. அதில் பல மாநிலங்கள் வெற்றியும் பெற்று கொரோனாவை கொஞ்சம், கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் காபந்து அரசு சும்மா இருந்துவிட்டது. விளைவு கொரோனா பன்மடங்கு பெருகிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோதே, வெற்றி கொண்டாட்டத்தை மறந்து மக்களின் நலன் காக்க கொரோனா கட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த துவங்கிவிட்டார்.
முதல்வராக பதவிஏற்றதும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவை அவர் பிறப்பித்தார். பின்னர் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி, கடந்த 10ம் தேதி முதல் நாளை அதிகாலை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாமல் அமலுக்கு வந்த ஊரடங்கை, மக்கள் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்றே கூறவேண்டும். எங்கு பார்த்தாலும் கூட்டம் கூடினர். தேவையின்றி வாகனங்களில் பறந்தனர். இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு பகல் 12 மணிக்கு பதிலாக 10 மணிக்கே கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனாலும், சும்மா ஊர் சுற்றும் கூட்டம் சுற்றிக் கொண்டேதான் இருந்தது.
இப்படி வருபவர்களை மடக்கி அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் நாளை அதிகாலையுடன் முழு ஊரடங்கு காலம் முடிய இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றே தான் சொல்ல முடியும்.
இந்நிலையில் தளர்வற்ற ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். இதனை ஏற்று ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காகத் தான் இந்த தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பொறுப்பற்ற செயல்களாலேயே இந்த தளர்வற்ற முழு ஊரடங்கு அவசியமானதாகிவிட்டது. உயிர்களைக் காக்கவே முழு ஊரடங்கு என்பதை பொதுமக்கள் இனியாவது உணர வேண்டும். இதை விடுமுறைக் காலம் என்று நினைத்து ஊர் சுற்றுவதை விட்டுவிட்டு வீட்டிலேயே இருப்போம், கொரோனாவில் இருந்து வீட்டையும் நாட்டையும் காப்போம் என்று ஒவ்வொருவரும் சூளுரைத்தால் மட்டுமே கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!