Tamilnadu
ரியல் எஸ்டேட் துறையில் தலை விரித்தாடும் ஊழல்.. அதிகாரிகள் கட்டுப்படுத்தாது ஏன்? - சென்னை ஐகோர்ட் கண்டனம்!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பழைய மாமல்லபுரம் சாலையில் 100 ஏக்கர் நிலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது.
இந்த வீடுகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, 2014ம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் புகார் மனுவை விசாரிக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், புகாரை மூன்று மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், பணி முடிப்பு சான்றிதழ் என்பது வெறும் கட்டுமான பணிகள் முடித்தது மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி, பணி முடிப்பு சான்றிதழ்கள் முறையான ஆய்வுக்கு பின் வழங்கப்படுவதில்லை எனவும், அவை வாங்கப்படுவதாகவும் குறை கூறினார்.
முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றுகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரை விசாரித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!