Tamilnadu

“சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்க” - சென்னை ஐகோர்ட் உத்தரவு!

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படும் நிலையில், இந்தத் தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்சிகளே எடுத்துக் கொள்வதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் அளிக்க வசதி உள்ளதாகவும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி, இது சம்பந்தமாக விதிகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.