Tamilnadu

”மின் உற்பத்தியில் 35000 கோடி சேமிக்கலாம்” - வல்லுனர்கள் அறிவுரையை காது கொடுத்து கேட்குமா எடப்பாடி அரசு?

பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், புதிய அனல் மின் திட்டங்களை நிறுத்துதல் மூலமும் தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என Climate Risk Horizons என்ற அமைப்பின் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ 3.1 ஜிகாவாட்உற்பத்தி திறன் கொண்ட பழைய நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவது மற்றும் 3.5 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான நிதியை நிறுத்திவிட்டு எதிர்காலத் தேவைக்காக குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும் 35 ஆயிரம் கோடி ரூபாயை 5 ஆண்டுகளில் சேமிக்க முடியும் என்று Climate Risk Horizons என்கிற ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

’உதய்’ எனப்படும் உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் திட்டத்தில் தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டு இணைந்ததன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் தோல்வி அடைந்துள்ளதாக "’Recipe for Recovery’ என்கிற அறிக்கை குறிப்பிடுகிறது. அண்மையில் தமிழக மின்வாரியத்துக்கு 30,230 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் மின்வாரியத்தின் கடன் தவணைகள் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம் செலவைக் குறைப்பது மற்றும் சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்ற வயதான உலைகள் ஆற்றல் குறைந்ததாகவும் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துவதாகவும் உள்ளது. மேலும் இந்த உலைகள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் 2015ஆம் ஆண்டு கொண்டுவந்த மாசு தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான கால அவகாசம் 2022 ஆம் ஆண்டு வரை இருந்தாலும் உலைகளில் நைட்ரஜன் ஆக்சைடை குறைப்பது மற்றும் Flue-gas desulfurization தொழில்நுட்பத்தை நிறுவுவதில் குறைந்த அளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

3.1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலம் இந்த உலைகளுக்கு மாசு தடுப்பு தொழில்நுட்பத்தை பொறுத்துவதற்கு ஆகும் 1,670 கோடி ரூபாய் செலவை தடுக்கலாம். இப்படியான உலைகள் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை மற்றும் நெய்வேலி I மற்றும் II நிலை அனல் மின் நிலையங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையங்களை மூடிவிட்டு அவற்றுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்குவதால் மேலும் 1,459 கோடி ரூபாயை ஓராண்டிற்கு மிச்சப்படுத்தலாம்.( 5 ஆண்டிற்கு 7,300 கோடி ரூபாய் மிச்சமாகும்).

இதுகுறித்து ஆய்வறிக்கையின் எழுத்தாளர் ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறியதாவது “ இந்த பழைய அனல் மின் நிலையங்களால் 2022 ஆம் ஆண்டிற்குள் காற்று மாசுபாடு தடுப்பு விதிகளை பின்பற்றுவதற்கான தொழில்நுட்பத்தை நிறுவ முடியாது இப்பணிக்காக 1,600 கோடி ரூபாயை செலவிடுவதற்கு பதில் அவற்றை மூடுவதே பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இருக்கும்.

தற்போது உள்ள நிதி நெருக்கடியில் மூலதன செலவுகளுக்காக கடன் வாங்குவது கடினமானது இந்த செலவை மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமே திரும்பப் பெற முடியும். மேலும் நாட்டில் தற்போது நிலவும் மின் மிகை உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றால் மாநில அரசுக்கு இந்த பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது” என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள நிலக்கரி அனல்மின் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுகளாக மொத்த உற்பத்தித் திறனில் இருந்து 60 சதவிகிதத்திற்க்கும் குறைவான உற்பத்தித் திறனில்தான் இயங்குகின்றன. மேலும் 3 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுமானப்பணி முடிவடைந்து.

அடுத்த 12 மாதங்களில் உற்பத்தியை துவக்கும் நிலையில் உள்ளன. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு தேவையைவிட அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும் நிலை உள்ளது இதன் காரணமாக பழைய அனல் மின் நிலையங்களை மூடும் செயல்பாடு எளிதானதாகும்.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் “இந்த அனல்மின் நிலையங்கள்தான் கடந்த பத்தாண்டுகளில், காற்று மாசுபாடு மற்றும் சாம்பல் கழிவு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. இந்த உலைகளை மூடுவதே சுற்றுச்சூழல் ரீதியாக சரியானதாக இருக்கும்.

மேலும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி “தமிழ்நாடு அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை இது மிச்சப்படுத்தும். நிலக்கரி அனல் மின் உற்பத்தியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழக அரசு தொடர்ந்து புதிய அனல் மின் நிலையங்களை நிறுவுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் தொடக்க நிலையில் இருக்கும் அனல் மின் நிலைய திட்டங்களை கைவிட்டுவிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதலீடு செய்து எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

பழைய அனல் மின் நிலையங்களை மூடுவது மட்டுமில்லாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் செலவைக் குறைப்பதற்கு வேறு இரண்டு வழிகளையும் இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

தொடக்க நிலையில் இருக்கும் புதிய அனல்மின் நிலைய திட்டங்களுக்கு செலவிடுவதை கைவிடுதல். மாநில அரசால் தொடங்கப்பட்ட 3.5 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உப்பூர், உடன்குடி மற்றும் எண்ணூர் விரிவாக்க அனல்மின் நிலைய திட்டங்களை கைவிடுவதால் 26 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும். தற்போது நிலவக்கூடிய மிகை மின் உற்பத்தி சூழல் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும்.

புதுப்பிக்கத்த மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான அவசியமே இல்லை எனவும் இந்த திட்டங்கள் தொடர்ந்தால் மாநில அரசின் நிதி நிலைமை மோசமடையும் எனவும் Climate Risk Horizons ஆய்வுக் குழுவின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக செலவாகும் உலைகளை கைவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துதல் மூலம் மின்சாரம் வாங்குவதற்கான செலவு மற்றும் சராசரி வருவாய்த் தேவை குறையும்.

ஒருகிலோவாட் மின்சாரத்திற்கு 4 ரூபாய்க்கு மேல் செலவாகும் உலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துவது அல்லது கிலோவாட் மின்சாரத்திற்கு ரூபாய் 3 அல்லது அதற்கும் குறைவாக செலவாகும் நல்ல உற்பத்தித் திறன் கொண்ட உலைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்.

மின்சாரம் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் மேற்கொண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்காமலோ அல்லது இருதரப்பும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை தொடக்க நிலையிலேயே ரத்து செய்வதன் மூலமகவோ அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை தடுக்கலாம். அதிக மின் தேவை இருக்கும் காலங்களில் மட்டும் மின்சாரத்தை வாங்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றுவதன் மூலமும் பெரிய அளவு பணத்தை சேமிக்க முடியும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.” என பூவுலகின் நண்பர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

35,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பதற்காக மட்டும் அல்லாமல் சுற்றுச் சூழல் பாதிப்பை குறைக்க முடியம் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டாவது, அறிவார்ந்த நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் கோரிக்கை.