Tamilnadu

அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும்.. சென்னையில் மிதமான மழையும் நீடிக்கும்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 06.12.2020 & 07.12.2020: ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

டிசம்பர் 06 குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 06 ,07 தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதி, கேரள கடலோர பகுதிகளில் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலை முன்னறிவிப்பு :

வடதமிழக கடலோர பகுதிகளில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 07.12.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.4 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 07.12.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.5 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.