Tamilnadu

தமிழகத்தில் தொடரும் கஞ்சா கலாசாரம்: மதுரையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது.. 6 பேருக்கு வலைவீச்சு

மதுரை மாநகர் பகுதியில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கனரக வாகனம் மூலம் கஞ்சா கடத்தியதாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவலை தொடர்ந்து மதுரை மாநகர் பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் அருகே வந்த கனரக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து வாகனத்தை பரிசோதனை செய்த போது சுமார் 300 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து ஓட்டுநர் மலைச்சாமியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பதும் இவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள ஆறு பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கஞ்சாவை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையரின் தனிப்படையினர் தனிக் கவனம் செலுத்தி கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also Read: “கஞ்சா புழக்கத்தால் தமிழகத்தில் தொடரும் கொலைகள்”: கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த முதியவர் படுகொலை!