Tamilnadu
சென்னையில் கடத்தப்பட்ட கூலித்தொழிலாளியின் 3 மாத கைக்குழந்தை மீட்பு !
சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில், கூலித் தொழிலாளியான விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் இவருடைய மனைவி சத்யா மற்றும் 3 மாத குழந்தை சஞ்சனா உள்ளிட்டோர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் ரமேஷ் சத்யா தம்பதியினர் பார்த்தபோது குழந்தை தூங்கிக்கொண்டு இருந்துள்ளது. அதன் பின்னர் ரமேஷ் சத்யா தூங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தை காணாமல் போன விஷயம் சமூக ஆர்வலரான சிவராமன் என்பவருடைய கவனத்துக்கு கொண்டு செல்ல அவர் ட்விட்டர் மூலம் சென்னை காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகர் உடனடியாக இதுகுறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று இரவு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கு இது சம்பந்தமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கோயம்பேடு போலிஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று இரவு அம்பத்தூர் ஓ.டி அருகே சந்தேகிக்கும் விதமாக ஒரு குழந்தை கேட்பாரற்று இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து போலிஸார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு தூக்கி வந்தனர்.
உடனே இதுகுறித்து குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பெற்றோர் குழந்தையை கண்டதும் அது தமது குழந்தை தான் என்று உறுதிப்படுத்தினர். பின்பு குழந்தையை கையில் தூக்கி முத்தமிட்டு கலங்கியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Also Read
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!