Tamilnadu

“ரூ.200 கோடி மதிப்புள்ள மண் வளத்தை கொள்ளையடிக்க ஆளுங்கட்சியினர் முயற்சி” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பை சீலக்கரட்டில் வனத்துறைக்கு சொந்தமான 56 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வேம்பு, புளியமரம் தோதகத்தி பூவரசம் போன்ற 50 வருடங்களுக்கு மேலான பலவகையான மரங்கள் உள்ளது.

இந்நிலையில், இந்த இடத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. ஏற்கனவே வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குஜிலியம்பாறை பகுதி இருக்கக்கூடிய மரங்களை வெட்டுவதால் மேலும் பாதிக்கப்படும்.

ஆகவே கரட்டுப் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்காமல் தரிசு நிலமாக உள்ள சமவெளி பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த வாகனங்களை முற்றுகையிட்டு நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மரம் வெட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது இதனிடையே இன்று 18.10.20. கரட்டுப் பகுதியில் மிண்டும் மரம் வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வருகை தந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வரும் தகவல் கிடைத்ததும் ஆளுங்கட்சியினர் உடனடியாக ஜேசிபி எந்திரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சம்பவ இடத்தில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “குஜிலியம்பாறை பகுதி ஏற்கனவே வரட்சியான பகுதியாகும் இங்கு சிப்காட் தொழிற்சாலை வருவதில் எனக்கு பொதுமக்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. கரட்டுப் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? சமவெளிப் பகுதியில் அமைக்க வேண்டும்.

இங்கு சிப்காட் என்ற பெயரில் கரட்டுப் பகுதியில் உள்ள மண் வளம் மரங்கள் போன்ற ரூ.200 கோடி மதிப்புள்ள வளத்தை கொள்ளையடிக்க ஆளுங்கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் உள்ள தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வனத்தை பாதுகாப்பது விட்டு விட்,டு ஆளும் கட்சியினர் கொள்ளையடிப்பதற்கு ஆதரவு இருந்து வருகிறார். இதனை தடுக்க வந்த என்னிடம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தகராறு செய்ததுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இவர் மீது குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார் .

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் கரட்டுப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி எடுப்பதற்கு அ.தி.மு.க குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் 27 ஆயிரத்து 650 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “வேலைவாய்ப்புத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!