Tamilnadu

“கிசான் திட்ட மோசடி வழக்கில் 101 பேர் கைது”: ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா? - CBCID போலிஸ் விசாரணை!

விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் கிளம்பியது. இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க-வினருக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ. 110 கோடி அளவில் நடைபெற்றுள்ள ஊழலில், விளையாட்டு - வேடிக்கை காட்டி திசை திருப்பாமல், 6 லட்சம் போலிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய - முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கிசான் திட்டத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிபிசிஐடி போலிஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதில் பலர் முறைகேடாக பல கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக 60% விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து கிசான் திட்டம் மோசடி வழக்கு தொடர்பாக இதுவரை சிபிசிஐடி போலிஸார் 101 பேர் கைது செய்துள்ளனர். அதேபோல் இதில் 100 அதிகாரிகள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இதுவரையில் கிசான் திட்டத்தில் மோசடி வழக்கு தொடர்பாக 105 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் சிபிசிஐடி போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி யாரால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் பல முக்கியமான அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சிபிசிஐடி போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Also Read: “கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!