Tamilnadu

போலியான பெயரில் மாஸ்க் தயாரித்து கைதான ‘நேர்மை’நாதன் உள்ளிட்ட 3 பேர் - திருப்பூரில் மோசடி!

திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட நேர்மைநாதன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில் செயல்பட்டு வரும் பல்வேறு காட்டன் நிறுவனங்கள், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முகக் கவசத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சீனு என்பவர் ஃபேஸ்புக்கில், குறைந்த விலையில் ராம்ராஜ் நிறுவனத்தின் முகக் கவசம் கிடைக்கும் எனப் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ராம்ராஜ் நிறுவன ஊழியர்கள், உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அந்நிறுவனத்தினர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலிஸில் புகார் செய்தனர். அதன் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஃபேஸ்புக்கில் மாஸ்க் விற்பதாக பதிவிட்ட சீனுவை தொடர்புகொண்டு அவர் மூலம் போலியாக தரமற்ற முறையில் மாஸ்க் தயாரிக்கும் நேர்மைநாதன் என்பவரையும் பிடித்துள்ளனர்.

இதையடுத்து, கே.வி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் பிரபல நிறுவனத்தின் முத்திரையுடன் முகக் கவசங்கள் போலியாக தயாரித்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த சீனு (30), கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த நேர்மைநாதன் (32) மற்றும் பிரபல நிறுவனத்தின் லோகோவை போலியாக பிரிண்ட் செய்த மாஸ்கோ நகர் முருகன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நேர்மைநாதன் எனும் பெயர்கொண்டவர், போலி முகக் கவசங்களை தயாரித்து கைதாகியிருப்பது சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.

Also Read: ஆடு வழங்கும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி : அதிமுகவினர் மீது சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டு!