Tamilnadu
கொரோனா பாதிக்காதவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சையளித்த கொடுமை - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!
திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (35). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனைக்காக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகளைப் பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 8ம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிவசுப்பிரமணியனுக்கு மட்டும் தொற்று இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து, உடனடியாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அவருக்கு காய்ச்சல், சளி என எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் நான்கு நாட்கள் மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளனர். ஆகஸ்ட் 12-ந்தேதி காலையில் டிஸ்சார்ஜ் செய்யப்போவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது சிவசுப்பிரமணியன், கொரோனா தொற்று ஏற்பட்டால் 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள நிலையில் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் 4 நாட்கள் காய்ச்சல், இருமல் இருந்ததாகவும் தற்போது குணமாகி 12-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்வதாகவும் டிஸ்சார்ஜ் அறிக்கை தயாரித்து, அவரை கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
இதனால் கொரோனா பாதிக்காத தன்னை ஏதோ கணக்குக்காக மருத்துவமனையில் அனுமதித்து, பாதிப்பு ஏற்படுத்தியாகக் கருதி சிவசுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சிவசுப்பிரமணியன்.
இதுகுறித்து பேசியுள்ள சிவசுப்பிரமணியன், “நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக விளக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், மாநகர நல அலுவலர் மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!