இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. 5 மாதகாலம் ஊரடங்குபிறப்பித்தும் எந்தப் பயனும் இல்லாத நிலையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
ஆனால் இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான படுக்கைகளுடன் தனிமை முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றெல்லாம் தமிழக சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகங்களும் தெரிவித்தன. ஆனால், அவ்வாறு எவ்வித நடைமுறையும் முறையாக செயல்படுத்தப்பட்டதாகவே தெரியவில்லை.
மாறாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரை வீட்டுத் தனிமையில் வைத்து இரண்டு வாரங்கள் கழித்து கொரோனா தொற்று இல்லையென அரசு கூறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ-வும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், கொரோனா நோயாளிகளுக்காக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் இதுவரை எத்தனை நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்?
பல்வேறு இடங்களிலும் கொரோனா நோயாளிகளை தங்க வைப்பதற்கு இடங்கள் தயார் என கூறிய நிலையில் அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவது எதற்காக எனக் கேள்வி எழுப்பிய அவர், கொரோனா நோயாளிகள் வீடுகளில் தங்க வைக்கப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதால் அதிக அளவில் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.