Tamilnadu
"50% OBC இடஒதுக்கீடு கோர உரிமை உள்ளது" - தி.மு.க தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதி களமான தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
அகில இந்திய கோட்டாவுக்கு மாநிலங்கள் வழங்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே தி.மு.க உள்ளிட தோழமை கட்சிகள் தொடர்ந்த வழக்கு. அதில் தமிழகத்தில் OBC பிரிவினருக்கு உள்ள 50% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய கோட்டா இடங்களில் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, " மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு கோர உரிமை உள்ளது" என தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வைத்த வாதம் ஏற்க முடியாது என்றும், மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத கல்வி நிலையங்களிலும் OBC இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், மத்திய - மாநில அரசுகளின் சுகாதார துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என மூன்று தரப்பு குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என வழக்கை நடத்தி வெற்றிக் கண்ட, தி.மு.க மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பின் மூலம் அனைத்து மாநில OBC மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!