தமிழ்நாடு

50% OBC இட ஒதுக்கீடு ஓர் எளிய விளக்கம்- வழக்கறிஞர் வில்சன் எம்.பி

முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரும் வழக்கு பற்றி விளக்கம் தருகிறார் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி

50% OBC இட ஒதுக்கீடு ஓர் எளிய விளக்கம்- வழக்கறிஞர் வில்சன் எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முதுநிலை மருத்துவ சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான(OBC) 50% இட ஒதுக்கீடு, பின்பற்றப்பட வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடங்கிய வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வரும் 27-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

50% இட ஒதுக்கீடு என்பது என்ன? அதில் மாநிலத்துக்குண்டான உரிமை என்ன? அதில் யாருக்கெல்லாம் பயன் போன்ற தெளிவான தகவல்களை, தி.மு.க சார்பில் இவ்வழக்கை நடத்தி வரும் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் எம்.பி நம்மிடம் விளக்கினார். அந்த எளிய விளக்கங்கள் இங்கே உங்களுக்காக.

1. Obc 50% இட ஒதுக்கீட்டை புரிந்து கொள்ள எங்கிருந்து தொடங்க வேண்டும்?

இந்த வழக்கு பற்றி தெரிந்து கொள்ள முதலில் மத்திய தொகுப்பு (All India Quota) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 1984-ம் ஆண்டுக்கு முன், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற மாநிலங்களில் மருத்துவக் கல்வி படிக்க முடியாத சூழல் நிலவியது. சில மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருந்தன. ஒரு சில மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளே இல்லாமல் இருந்தன. எனவே இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவரும், வேறு எந்த ஒரு மாநிலத்திலும் மருத்துவம் படிக்க உச்ச நீதிமன்றம் ஒரு பரிந்துரையை செய்தது. அதுவே மத்திய தொக்குப்பு (All India Quota).

உச்ச நீதிமன்ற பரிந்துரை யாதெனில், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் வசம் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்களில் 15% மற்றும் முதுநிலை படிப்புகளில் 50% இடங்களையும் மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும். மத்திய அரசும் தன் வசம் உள்ள கல்லூரிகளில் இருந்து முறையே 15% மற்றும் 50% இடங்களை மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும். பொதுவான தேசிய அளவு தேர்வு நடத்தி மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். இதுவே மத்திய தொகுப்பு முறை.

2. மத்திய தொகுப்பு இடங்களை நிரப்ப இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா?

முழுவதுமாக இல்லை. மாநில அரசு மத்திய தொகுப்பிற்கு கொடுக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைத் தவிர பிற வகுப்பினருக்கு (எஸ்.சி/எஸ்.டி, உயர்வகுப்பினர் EWS) கொடுக்கப்படுகிறது. Obc மற்றும் எஸ்.சி (3%) பிரிவினருக்கு குறைவாக இடஒதுக்கீடு கொடுப்பது என்பதே இப்போது பிரச்னை.

3. Obc பிரிவினருக்கு எவ்வளவு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும்?

இந்த கேள்விக்கு முதலில் நீங்கள், நம் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு பின்பற்றும் இட ஒதுக்கீடு முறைகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு பின்பற்றும் அகில இந்திய இடஒதுக்கீடானது, OBC (இதர பிற்படுத்தப்பட்டோர்) 27%, எஸ்.சி 15%, எஸ்.டி 7.5%, EWS (பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல் வகுப்பினர்) 10% என மொத்தம் 59.5% வழங்கப்படுகிறது.

இதுவே தமிழகத்தின் நிலை வேறு. வகுப்பு வாரியான பிரதிநிதித்துவ அடிப்படையில் மொத்தம் 69% இட ஒதுக்கீடு இங்கு கொடுக்கப்படுகிறது. Bc 27%, Mbc (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) 20%, BcM (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்) 3%, எஸ்.சி 18%, எஸ்.டி 1% என மொத்தம் 69% இட ஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை BC + MBC+ BCM இந்த மூன்று வகுப்பையும் சேர்த்து குறிப்பிடப்படுவது தான் OBC. தமிழகத்தை பொருத்தவரை OBC பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு 50%( 27% + 20% +3%). இந்த 50% இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அதாவது மத்திய தொகுப்புக்கு மாநிலம் கொடுத்த 50% முதுநிலை மருத்துவ இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மத்திய அரசு அதை தர மறுக்கிறது. மத்திய அரசு, மத்திய தொகுப்புக்கு கொடுக்கும் 50% மருத்துவ இடங்களுக்கு மட்டும், தான் பின்பற்றும் 27% OBC இடஒதுக்கீட்டை கொடுக்கிறது. ஆனால், நாம் கொடுத்த இடங்களில், நம் மாநிலத்தில் உள்ளதை போல 50% OBC இட ஒதுக்கீட்டை கொடுக்க வேண்டும் என்றால் கூடாது என்கிறார்கள். இது எப்படி சமூக நீதியாகும்?.

4. எஸ்.சி/எஸ்.டி இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா?

பின்பற்றப்படுகிறது. ஆனால் அதிலும் முழுமையில்லை.

தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மாநில அளவில் பார்த்தால் மொத்தம் 19% ( எஸ்.சி 18%, எஸ்.டி 1%). ஆனால் மத்திய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டின் படி எஸ்.சி 15% மற்றும் எஸ்.டி 7.5% வழங்கப்படுகிறது.

தமிழக இடஒதுக்கீட்டு அளவோடு வைத்து பார்த்தால் எஸ்.சி பிரிவினருக்கு 3% இட ஒதுக்கீடு குறைகிறது. அதே நேரம் 1% மட்டுமே உள்ள எஸ்.டி பிரிவினருக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட எஸ்.சி பிரிவினருக்கு குறைவாகவும், குறைந்த மக்கள் தொகை கொண்ட எஸ்.டி பிரிவினருக்கு அதிகமாகவும் இடஒதுக்கீடு கொடுக்கிறது.

மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டு முறைப்படி OBC பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை நாம் வென்றுவிட்டால், எஸ்.சி பிரிவினருக்கும் 18% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றுவிடலாம். அதாவது 3% கூடுதல் இடங்கள். ஆகையால் இந்த வழக்கு OBC பிரிவினருக்கானது மட்டும் அல்ல எஸ்.சி பிரிவினருக்கும் சேர்த்தே பயனளிக்கக் கூடியது.

5. Obc இட ஒதுக்கீடு கொடுக்க மத்திய அரசு மறுப்பது ஏன்?

2015-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சலோனி குமார் என்பவரது வழக்கு நிலுவையில் உள்ளதையே காரணமாக காட்டுகிறது மத்திய அரசு. OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோருகிறது அவ்வழக்கு. தாக்கல் செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. தாக்கல் செய்தவருக்கு மருத்துவ இடமும் கிடைத்துவிட்டது. ஆனாலும் அந்த வழக்கையே சுட்டிக் காட்டுகிறது மத்திய அரசு. 50% இட ஒதுக்கீடு வழங்காமல் இருக்க ஒரு நியாயமான காரணமும் இல்லை. அவர்களுக்கு கொடுக்க மனம் இல்லை என்பதே உண்மை. கடந்த 4 ஆண்டுகளில் 2729 இடங்களை தமிழக OBc மாணவர்கள் இழந்துள்ளனர்.

6. மொத்த இட ஒதுக்கீடு 50% மிகாமல் இருந்தால் OBC இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்கிறதே மத்திய அரசு?

இதில் அடிப்படை நியாயம் இல்லை. மொத்த இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு கூறுவது யாதெனில், தமிழகத்தில் கொடுக்கப்படும் மொத்த ஒதுக்கீடு (Obc + Sc+St) 50%-க்குள் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் நாம் 69% இட ஒதுக்கீடு வழங்குகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் வகுப்பு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதை 50 சதவிகிதத்துக்குள் வைக்க கூறும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. நம்மை 50% மிகாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறும் மத்திய அரசு, தன் மருத்துவக் கல்லூரிகளில் 59.5% இடஒதுக்கீடு வழங்குகிறது. அப்படி இருக்கும் போது மாநிலங்கள் மட்டும் 50% தாண்டக் கூடாது என்று கூறுவதில் ஒரு “பிக் பிரதர்” மனநிலை இருக்கிறது.

7. மத்திய அரசு EWS ( பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மேல் வகுப்பினர்) இடஒதுக்கீடு பின்பற்றுகிறதா?

ஆம். மாநில அரசு மத்திய தொகுப்பிற்கு கொடுக்கும் இடங்களில் OBC -க்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தான் உத்தரவிட வேண்டும் என்று கூறுகிறது மத்திய அரசு. அதுவே உச்ச நீதிமன்றத்தை கேட்காமல் மத்திய அரசு EWS -க்கு மட்டும் 10% இட ஒதுக்கீடு வழங்குகிறது.

EWS கோட்டாவை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற உறுதியோடு 2020-ம் ஆண்டு மே மாதம் நடக்க இருந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தியது மத்திய அரசு. பின் 10% EWS இட ஒதுக்கீடோடு ஜூன் மாதம் அதை நடத்தி முடித்தது.

நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒரு வழக்கை சுட்டிக் காட்டி OBC இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது மத்திய அரசு. ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பு மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை ஒரே ஆண்டுக்குள் அவசர அவசரமாக வழங்குகிறது. இதிலிருந்து மத்திய பா.ஜ.க அரசின் நோக்கம் என்ன என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

8. 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை எப்படி நியாயப்படுத்துவது?

2010ல் இந்திய மருத்துவக் கவுன்சிலும், இந்திய பல் மருத்துக் கவுன்சிலும் தலா இரண்டு முக்கிய அறிவிப்பாணைகள் வெளியிட்டன. அதன் படி மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுவதால் 50% இட ஒதுக்கீடு உரிமை உள்ளது என நிரூபிக்கலாம்.

2009 ஹரியானா மாநில வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹரியானா மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு இல்லை. அதனால் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என அவ்வழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “மாநிலத்தில் இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்றால், மத்திய அரசு வழங்கும் இடஒதுக்கீடு அங்கு செல்லுபடியாகாது. மாநிலத்தில் என்ன இடஒதுக்கீடு உள்ளதோ அது மட்டுமே கொடுக்கப்படவேண்டும். மாநிலம் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், வேறு எந்தவித இடஒதுக்கீடும் இல்லை என்பதே முடிவு.” என்றது.

அதை நாம் இப்படியும் கருத்தாக்கம் செய்யலாம், “ மாநிலத்தில் என்ன இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதோ அதுவே கொடுக்கப்பட வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீடு அங்கு பின்பற்றப்படக் கூடாது. மாநிலத்தில் 0% என்றால் 0% மட்டுமே இடஒதுக்கீடு. 69% என்றால் 69 சதவிதத்தையே கொடுக்க வேண்டும். ” எனவே தமிழகத்தின் 50% OBC இடஒதுக்கீடு இங்கு சாத்தியமாகிறது.

இந்த தீர்ப்புக்கு பின் தான் மேல் குறிப்பிட்டுள்ள 2010-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை இந்திய மருத்துவக் கவுன்சிலும், இந்திய பல் மருத்துக் கவுன்சிலும் வெளியிட்டன. அதன்படி மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு, மருத்துவ சேர்க்கையில் பின்பற்ற வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பாணைகளில் மற்றொன்றும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில், மருத்துவ சேவைகள் இயக்குநரகம் (DGHS) என்ற அமைப்பே மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தும் என்றது. நன்றாக கவனிக்க வேண்டும். வெறும் கவுன்சிலிங் நடத்தி மருத்துவ இடங்களை நிரப்புவது மட்டுமே அந்த அமைப்பின் வேலை. ஆனால், தற்போது இடஒதுக்கீட்டையும் அந்த அமைப்பே முடிவு செய்கிறது. இது வரம்பு மீறல்.

மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் கொடுக்கும் இடங்களில், மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்பட வேண்டும். அதை நிறைவேற்றும் பணி மட்டும் தான் மருத்துவ சேவைகள் இயக்குநகரத்துக்கு உள்ளது. இடஒதுக்கீட்டை முடிவு செய்வதில் அது தலையிட முடியாது என்பது தெளிவாகிறது.

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கவும், மருத்துவ உட்கட்டமைப்புக்கு செலவு செய்யும் தொகையும், இங்கு முக்கியப் பங்காற்றுகிறது. மாநில மக்களின் சுகாதார வாழ்வுக்கு அரசு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிறது. அதில் தன் மாநில மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் உரிமை மாநிலத்துக்கு கட்டாயம் உள்ளது.

தமிழகம் 50% இடஒதுக்கீடு பெற உரிமையுள்ளது என்பதை இந்த காரணங்கள் கொண்டே நியாயப்படுத்தலாம்.

Related Stories

Related Stories