Tamilnadu

'சேவா பாரதி' சர்ச்சை - தமிழகம் முழுவதும் காவல் நண்பர்கள் குழுவுக்கு தடை!

தமிழக காவல் துறையில், காவலர்கள் நண்பர் குழுவினருக்கு (Friends of Police) தடை விதித்து காவல் துறை தலைமை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலிஸாரால் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். போலிஸாருடன் சேர்ந்து போலிஸ் நண்பர் குழுவினரும், அவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கிளையான சேவா பாரதி, எனும் அமைப்பினரே சாத்தான்குளம் போலிஸ் நண்பர் குழுவில் இயங்குகின்றனர். காவல் துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கேற்பு மிகுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மத ஒடுக்குமுறையை காவல் துறை மூலம் நடத்த இது வாய்ப்பளித்து விடும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

சேவா பாரதி அமைப்பை அதிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டது. மேலும், காவல் நண்பர்கள் குழுவின் நோக்கம் என்ன, அதிகார வரம்பு என்ன? விசாரணைக்கு வருபவர்களை அடிக்க அவர்களுக்கு அதிகாரம் எப்படி கொடுக்கப்பட்டது, போன்ற பல கேள்விகள் முன் வைக்கப்பட்டது.

சாத்தான்குளம் விவகாரத்தில் சேவா பாரதி குழுவைச் சேர்ந்த போலிஸ் நண்பர்கள் குழுவினர் 5 பேர் மீது வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் காவல் துறையினருடன், சீருடையில்லாமல் நிற்கும் சிலர் மக்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது.

தொடர் சர்ச்சை எழுந்த நிலையில் தான், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்ட எஸ்.பிக்கள் இந்த போலிஸ் நண்பர்கள் குழுவை தடை செய்து உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

அந்த பணியை இனி ஊர்காவலர் படை, முன்னாள் படை வீரர்கள் வைத்து பயன்படுத்தி கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர். மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊர்காவல் படையினர் பணிக்கு பயன்படுத்தப்படும் போதும், அவர்களுக்கான வரம்போடு காவல் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

Also Read: சாத்தான்குளம் கொலை: கேலி பேசிய குருமூர்த்தி; எடப்பாடி அரசின் அடிமை சாசனத்தால் வந்த வினை - உதயநிதி சாடல்!