
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து, இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
முதலாவது அறிவிப்பு: -
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 14 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இரண்டாவது அறிவிப்பு: -
திண்டுக்கல் மாநகராட்சியில், இப்போது இருக்கும் பழைய பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு: -
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் புனித தீர்த்தங்களான இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
நான்காவது அறிவிப்பு: -
புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு: -
அதிக அளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மார்க்கம்பட்டியில் உலகத் தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு: -
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த “சுற்றுலா முதலீட்டு பூங்கா” கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் சிப்காட் மூலமாக அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு: -
கண்வலிக் கிழங்கு உற்பத்தியில், நம்முடைய நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த பயிருக்கு நிலையான, நியாயமான விலை கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசுத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
எட்டாவது அறிவிப்பு: –
ஒட்டன்சத்திரம் நகராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், 17 கோடி ரூபாய் செலவில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும்.








