
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “திமுக கூட்டணியை இந்துக்களுக்கு எதிரானது” எனக் கூறுவது கண்டனத்திற்குரியது என தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள, சர்வே தூணில், மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் நோக்கில், தீபம் ஏற்ற வேண்டுமென சங்கபரிவார் அமைப்புகளைச் சேர்ந்தோர் முயன்றனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மக்களின் ஆன்மீக உணர்வை பயன்படுத்தி மதக்கலவரத்தை உருவாக்கி அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கம் இதில் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது.
அதில் மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கு ஏற்றலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டை புறந்தள்ளிவிட்டு, மதச்சார்ப்பு நிலையுடன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
இத்தீர்ப்பு, வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாப்புத் தொடர்பாக ஒன்றிய அரசு 1991 ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிரானதாகும். திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சரியான, உறுதியான நிலைபாட்டால் மதநல்லிணக்கம் காக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இத்தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்பிற்குரியது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்த நினைக்கும் வகுப்புவாத சங்பரிவார் அமைப்புகளின் அரசியல் நோக்கம் தமிழ்நாட்டில், திமுக அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமும் ,எரிச்சலும் அடைந்துள்ள பியூஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள், திமுக அரசையும், திமுகவையும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியையும் “இந்துக்கள் எதிரி“ என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது .
உண்மையில் பாஜகவும் சங் பரிவார் அமைப்புகளும் தான் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்துக்களுக்கும், அனைத்து சாதி இந்து பெண்களுக்கும் எதிரான அமைப்புகளாகும். அவை இட ஒதுக்கீட்டிற்கும் சமநீதிக்கும் சமத்துத்திற்கும் எதிரான அமைப்புகளாகும். இந்துக்களின் ஒற்றுமைக்கு எதிரானவையாகும்.
அரசியல், பொருளாதார ,சமூக சமத்துவத்தை ,பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ,இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்தியாவில் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக இருக்க வேண்டும் எனக் கூறிவரும் அமைப்புதான் ஆர்எஸ்எஸ். சனாதன தர்மம் காக்கப்பட வேண்டும் என மூர்க்கத்தனமாக செயல்படும் அமைப்புதான் ஆர்எஸ்எஸ்.
சனாதன தர்மம் என்பது, பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்டும் மேலிருந்து கீழான சாதிய ஏற்றத்தாழ்வை, தீண்டாமையை, சாதி அடிப்படையிலான பரம்பரை தொழிலை,உழைப்புச் சுரண்டலை ஆணாதிக்கத்தை, அகமணத் திருமண முறையை பாதுகாக்க வேண்டும், அது நிரந்தரமாக நீடிக்க வேண்டும் எனும் அசமத்துவக் கோட்பாடாகும். அந்த அதர்மத்தையே சங்பரிவார் அமைப்புகள் தர்மம் என்கின்றன.
இந்த சனாதன தர்மம் என்பது பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அனைத்து சாதிகளின் பெண்களும் எதிரானதாகும். இந்துக்களை பிளவு படுத்துவதாகும்.
இந்த சனாதன தர்மம் நீடிக்க வேண்டும், மனுதர்மம் ஆட்சி செய்ய வேண்டும் எனக் கூறும் பியூஷ் கோயல் போன்ற சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள், மனுதர்ம ஆட்சிக்கூடாது, சாதி ஒழிக்கப்பட வேண்டும், இட ஒதுக்கீடு சமூக நீதி காக்கப்பட வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்;
சாதி பாகுபாடு இன்றி அனைவரும் ஆலயங்களுக்குள் சென்று வழிபடும் உரிமை வேண்டும், அனைவரும் சுதந்திரமாக, சமத்துவமாக, சகோதரத்துவமாக, சுயமரியாதையோடு வாழ்ந்திட சமதர்ம சமூகம் படைக்கப்பட வேண்டும் எனச் செயல்படும் திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் இந்துக்கள் எதிரி என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.பிராமண மேலாதிக்க மனநிலையாகும்.
இந்தியாவின் அரசியல் சட்டப்படி செயல்பட வேண்டிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அதற்கு நேர் எதிரான சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசுவது ஓர் குற்றச் செயலாகும்.

தலித்துகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் ,உழைக்கும் மக்களுக்கும் எதிராக செயல்படும் பாஜகவினர், திமுகவை இந்து விரோதிகள் எனக் கூறுவது உண்மைக்கு மாறானது.
சனதான தர்மம் என்பது வேறு. இந்து மதம் என்பது வேறு. சனாதன தர்மத்தை ஒழிப்பது என்பது சாதியை ,ஆணாதிக்கத்தை,சாதி அடிப்படையிலான குலத்தொழிலை ஒழிப்பதாகும். இந்து மதத்தை ஒழிப்பதல்ல. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்பவையல்ல. பியூஸ் கோயல் போன்றவர்கள் புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடக் கூடாது. பொய்யான கருத்துகளைச் சொல்லி அரசியல் ஆதாயம் பெற முயலக் கூடாது.
இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பதாக மார்தட்டிக் கொள்ளும் பியூஸ் கோயல் போன்ற சங் பரிவார் அமைப்பினர், தமிழ்நாட்டில் ஆடு கோழி போன்றவைகளை வழிபாட்டின் போது பலியிடக்கூடாது என்று அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்ட போது, ஏன் அதை எதிர்த்துப் போராடவில்லை?
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கூறாமல், ஏன் எதிர்த்தனர்? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏன் எதிர்க்கின்றனர்?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை வைணவப் பிரிவினரிடையே பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் முயலவில்லை. அவர்களுடியே ஆண்டு தோறும் ஏற்படும் அடிதடியை தடுக்க ஏன் முயலவில்லை?
இதிலெல்லாம் தலையிட்டு இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத பியூஸ் கோயல் போன்றவர்கள், அனைத்து சாதி, சமயப் பிரிவினரின் வழிப்பாட்டு உரிமைகளையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் திமுக அரசை பார்த்து, ‘இந்து விரோதி’ என்பது நகைப்பிற்குரியது.
ஆன்மீகத்தை, வழிபாட்டு முறைகளை, இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்துவதை பியூஸ் கோயல் போன்ற சங்பரிவார் உறுப்பினர்கள் உடனடியாக கைவிட வேண்டும். இல்லை எனில் அவர்களை எதிர்த்து கடுமையானப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.
மதநல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும், வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாத்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் தொடர்ந்து போராடும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.








