Tamilnadu

மருந்து செலவு ரூ.405; PPE கிட் கட்டணம் ரூ.2,40,0000 - கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படும் அளவுக்குச் சென்றுள்ளது.

வெகுவாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பி வழிகின்றன. இந்த சூழலைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து ‘டைம்ஸ் நவ்’ செய்தி நிறுவனம் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகளில் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் பெறுவது அம்பலமானது.

கொரோனா தொற்று சூழலைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி அரசு பெரிதாகக் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக கட்டணக் கொள்ளையை ஆதரித்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகளின் வசதிகளுக்கு ஏற்ப அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படும் என அரசு அறிவித்தும், மருத்துவமனைகள் அதைப் பின்பற்றுவதில்லை. அதைக் கண்காணிக்கத் தவறி மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறது அரசு.

அதன்படி, சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 16 நாட்கள் தனிமைப்படுத்த கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரிடம் ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 595 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளனர்.

பி.பி.இ கவச உடை ஒன்றின் விலை சுமார் ரூ.600 ஆக இருக்கும் நிலையில், பி.பி.இ உடைகளுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ.16,000 கட்டணம் வசூலித்துள்ளனர்.

மருந்து கட்டணமாக ரூ. 405, பி.பி.இ கிட் கட்டணமாக 16 நாட்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் கொள்ளை தொடர்பான மருத்துவமனை ரசீது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுக்க தனியார் மருத்துவமனைகளில் இதேபோல கொள்ளை நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனை கட்டண விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: “கொரோனா சிகிச்சைக்கு பல லட்சம் வசூலிக்கும் மருத்துவமனை”: ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலம் - மு.க.ஸ்டாலின் தாக்கு!