Tamilnadu

“மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது” - சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கும் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மூன்றாவது முறையாக, மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், கொரோனா முழுமையாக இல்லாத நிலையை எட்டிய பிறகே டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கவேண்டும் என உத்தரவிடக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர்நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், மதுபானக் கடைகள் முன் கூட்டம் கூடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதும், கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கி.மீ., தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் நின்று மதுவை வாங்கி் சென்றுள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக விலகலை பின்பற்வது கடினம் எனவும், 40 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகளை திறப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், மக்கள் வேலைக்குச் செல்ல அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றச்சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனை என்பது அத்தியாவசிய நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மதுபானம் வாங்க பணம் கேட்டு பெண்களை துன்புறுத்தவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணான வகையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நிதி தராத மோடி; டாஸ்மாக் கல்லாவை திறக்கும் எடப்பாடி - மக்களை சவக்குழியில் தள்ளும் அரசுகள்!