உணர்வோசை

நிதி தராத மோடி; டாஸ்மாக் கல்லாவை திறக்கும் எடப்பாடி - மக்களை சவக்குழியில் தள்ளும் அரசுகள்!

கொரோனா தொற்று தீவிர நிலையை அடையும் நேரத்தில் ஊரடங்கை தளர்த்தி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கின்றனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த கட்டுரை.

நிதி தராத மோடி; டாஸ்மாக் கல்லாவை திறக்கும் எடப்பாடி - மக்களை சவக்குழியில் தள்ளும் அரசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

45 நாட்கள் கடந்த நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் நினைத்திருக்கும் வேளையில், தற்போது தான் கொரோனா தொற்று தீவிர நிலையை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 மடங்கு உயர்வு.

சென்னையில் 266 பேருக்கு ஒரே நாளில் தொற்று இருப்பது உற்தியாகியிருக்கிறது. புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் கோயம்பேட்டில் இருந்து மட்டும் 200 பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. தமிழகம் முழுவதிலும் கோயம்பேடு சென்று வந்த வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை இப்படி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் போதுதான், ஊரடங்கை தளர்த்தி, டாஸ்மாக் கடைகளை திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அடிப்படை அறிவுள்ள யாரும், தொற்று அதிகரித்திருக்கும் இந்நேரத்தில் தான் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இப்போது தான் அனைத்தையும் தளர்த்தியிருக்கிறது தமிழக அரசு. இதன் பின்னணி என்ன?

ஒரே பதில் மாநில அரசிடம் நிதி இல்லை!. 45 நாட்களுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் ஊரடங்கில் இருந்ததால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடன் கொரோனா பேரிடரை சமாளிக்க செலவும் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறது தமிழக அரசு.

ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புத் தொகையான 4,458 கோடி ரூபாயை உரிமையுடன் வாங்கியிருந்தாலே மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

கொரோனா பேரிடரை சமாளிக்க 9000 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க வெண்டும் என தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். ஆனால் கிடைத்ததோ வெறும் 510 கோடி ரூபாய் தான். அதுவும் 15வது திட்டக்கமிஷன் படி மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பை சரிகட்ட மத்திய அரசு தரும் தொகை. மேலும், பேரிடர் தடுப்பு நடவடிக்கைக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் நிதி. இவை இரண்டும் சேர்ந்ததே அந்த 510 கோடி ரூபாய். ஆக மாநில அரசுக்கு ஒரு ரூபாய் கூட கொரோனா சிறப்பு நிதி வழங்கவில்லை மத்திய அரசு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்க இருந்த சி.எஸ்.ஆர் (corporate social responsibility) நிதியை PM Cares நிதிக்கு வழங்கினால் தான் அது சி.எஸ்.ஆர் நிதியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், முதலமைச்சர்கள் மற்றும் மாநில பொது நிவாரண நிதிக்கு வழங்கினால் அது சி.எஸ்.ஆர் நிதியாக கணக்கில் கொள்ளப்படாது என்று மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அறிவித்தது. இதனால் தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களிடமிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கிடைக்க இருந்த நிதியும் தடைபட்டது. தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் மக்கள் கொடுத்த பணம்.

ஊழல், டெண்டர் முறைகேடுகள், கடன் சுமை, நிதி மேலாண்மை தோல்வி என தமிழக அரசு நிதியின்றி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் 245 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்களை 630 ரூபாய்க்கு வாங்கியது தமிழக அரசு. அந்த கிட்களும் சரியான முடிவுகளை கொடுக்கவில்லை என்பதால் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது வரை ரேபிட் டெஸ்டிங் எனப்படும் அதி விரைவு பரிசோதனை செய்யப்படவே இல்லை. ஆனால், உலக சுகாதார மையம் தொடக்கம் முதலே பரிசோதனை மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என்று வலியுறுத்தி வந்தது. தமிழகத்தை விட நிதி நிலையில் பின் தங்கிய கேரள மாநிலத்துக்கு இது சாத்தியமாகியுள்ளது.

சரி பரிசோதனை தான் செய்ய முடியவில்லை. கொரோனா தொற்றை பரவ விடாமல் செய்ய மக்களை வீட்டிலேயே இருக்க வைப்பது தான் ஒரே வழி. வேலை இல்லை, வருமானம் இல்லை, சாப்பிடுவதற்கே வழியில்லை என இருக்கும் நிலையில், மக்களுக்கு உதவித் தொகையும், உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.

தேசிய ஊரடங்கை அறிவித்த மோடி இதற்காவது ஏதேனும் வழி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வருவாய் இல்லாத நேரத்தில் மக்கள் தங்கள் அடிப்படை செலவுகளை செய்துகொள்ள 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருகிறேன் என்று கூறிய மோடி வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கினார். அதுவும் வெறும் 20% மக்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 500 கிடைத்த ஒருவரைக் கூட நம்மால் கண்டறிய முடியாது.

இந்த நிலையில், முழு சுமை மாநில அரசின் மீது விழுகிறது. ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய், மற்றும் 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை வைத்து 4 பேர் கொண்ட குடும்பம் எப்படி ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என்பதை எடப்பாடி தான் தெரிவிக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 800 ரூபாயைத் தாண்டுகிறது. இதில் 1000 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்.

ரேபிட் டெஸ்டிங் கிட் இல்லை, நிதியுதவி இல்லை, பொது நிவாரணத்துக்கு வர இருந்த நிதியும் பிடுங்கப்பட்டு விட்டது, மக்களை வீட்டில் இருக்க வைக்க நிதி கொடுக்க வேண்டும், கொரோனா கட்டுப்படுத்த செலவு, கஜானாவில் நிதியில்லை என திக்குமுக்கு தெரியாமல் இருக்கிறது தமிழக அரசு.

மாநில அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது, அதை சமன் செய்ய ரிசர் வங்கியிடம் கடன் வாங்கலாம். இதை Ways and means என்கிறார்கள். அந்த தொகையை 60% கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் இதில் இருக்கும் சிக்கல் யாதெனில், இந்த கடனை மாநிலங்கள் 3 மாதத்துக்குள் திரும்பி வழங்க வேண்டும். தமிழகத்துக்கு இதன் மூலம் 2,600 கோடி ரூபாய் கடன் கிடைக்கும். ஆனால், 90 நாட்களில் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதால் இதுவும் எவ்வளவு தூரம் பயன் தரும் என்பது தெரியவில்லை.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து 1.75 லட்சம் கோடியை கார்ப்பரேட்களுக்கு வரி தள்ளுபடி கொடுத்த மத்திய அரசு, வங்கிகளை ஏமாற்றிய கார்ப்பரேட் முதலைகளுக்கு 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த மத்திய அரசுக்கு, ஒரு பேரிடர் காலத்தில் மக்களை காத்து நிவாரணம் வழங்க நிதி இருந்தும் வழங்க மனமில்லை.

நிதிநிலை கையைக் கடிக்க, வருவாயை பெற, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. வாட் வரி முழுவதும் தமிழக அரசுக்கே சேரும். இதனால் பெட்ரோ விலை 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும், உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருப்பதை வைத்து நாட்களை ஓட்டி வரும் மக்களுக்கு இது கூடுதல் சுமை. அதைப்பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை.

இதற்கு அடுத்தாக வருமானம் கொழிக்கும் வியாபாரம் டாஸ்மாக் கடைகள். தமிழகமே அதில் தான் இயங்குகிறது என்று கூறினாலும் மிகையாகாது. மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றிலும் இருந்து அரசு மறைமுகமாக நமக்கு தெரிவிப்பது யாதெனில், "இனியும் அரசை நம்பாதீர்கள். உங்கள் பாதுகாப்பை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு உங்கள் நலன் முக்கியமில்லை" என்பது தான். ஆனால், மக்கள் ஊரடங்கை மதிக்கவில்லை,சமூக விலகலை கடை பிடிக்கவில்லை என்று பழியை போட்டுவிட்டு, சிரித்தபடி போஸ் கொடுப்பார் எடப்பாடி.

இத்தனை நடந்தும் மோடி அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என சண்டை போடுவாரா? மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை அதனால் தான் டாஸ்மாக்கை திறக்கிறோம், பெட்ரோல் டீசல் மீதான் வாட் வரியை உயர்த்தியிருக்கிறோம் என்று முதலமைச்சர் பகிரங்கமாக அறிவிப்பாரா? நிச்சயம் மாட்டார்!.

ஏனெனில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆளும் அ.தி.மு.க-வுக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை. மோடி சொன்னதை மண்டியிட்டு கேட்டதால் கிடைத்த நலன்களையும், இனி கிடைக்க இருக்கும் நலன்களுமே அவர்களுக்கு முக்கியம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தங்கள் நலனுக்காக மக்களை பலி கொடுப்பது.

Related Stories

Related Stories