Tamilnadu

“வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்காவிட்டால் எந்தப் பயனும் இல்லை” - திருச்சி சிவா எம்.பி பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய அரசுதான் வேளாண் மண்டலத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

“டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் அதை சட்ட ரீதியாக அங்கீகரித்து அதற்குத் தேவையான நடவடிக்கையை எடுப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

எண்ணெய்க் கிணறுகள், புதிய தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளும் அமைக்காமல் இருந்தால் மட்டுமே முழுமையாக வேளாண் மண்டலமாக மட்டுமே இருக்கமுடியும்.

மத்திய அரசிடம் விளக்கம் பெறாமல் மாநில அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் 267வது விதியின் கீழ் மற்ற விவாதங்களை எல்லாம் ஒத்திவைத்து இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினேன். அதனை ஏற்க மறுத்தார்கள். அதன் பின் மாநில அரசு அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியும் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், ஏற்கனவே இருக்கிற ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சி மற்றும் 340 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளை உடனடியாக ரத்து செய்தால்தான் அந்த அறிவிப்பு உண்மையாக இருக்கும். இல்லையெனில் ஏற்கனவே 110 அறிவிப்பில் சிலவற்றை அறிவித்து அது எப்படி நடக்காமல் இருந்ததோ அதேபோல் தான் இதுவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “வேளாண் மண்டலமாக அறிவிப்பது யார் செய்யவேண்டியது?” - விவசாயிகளை ஏமாற்றும் நாடகம் என மு.க.ஸ்டாலின் தாக்கு!

தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து பதிலளித்த அவர், “நல்ல முறையில் ஆட்சி செய்தால் மக்கள் அங்கீகாரம் தருவார்கள். அதுவே ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணம். இந்த வெற்றி, நல்ல ஆட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.