Tamilnadu

“தும்பை விட்டு வாலைப் பிடித்திருப்பது அ.தி.மு.க அரசுதான்” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தொடர்பாக கேள்வி எழுப்பிப் பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் ஏகமனதாக 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று இதுவரை தமிழக அரசு பதில் அளிக்கவில்லை.

மத்திய அரசு அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை . இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டி மீண்டும் மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்று சொன்னதற்கு எந்தப் பதிலும் இல்லை. காலம்தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நீட் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சமூகநீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பதை கடுமையாக பதிவு செய்கிறேன். இதற்கு அரசு என்ன விளக்கம் தரப்போகிறது? இதற்கு அமைச்சர் என்ன விளக்கம் தரப்போகிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பிறகு பேசிய விஜயபாஸ்கர், தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது தி.மு.க என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நீதிமன்றம் சென்று நீட் தமிழகத்தில் வரக்கூடாது என தடை வாங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

Also Read: #LIVE #TNAssembly | நீட் வழக்கில் அரசு என்ன செய்யப் போகிறது? - மு.க.ஸ்டாலின் கேள்வி!

இப்போது எங்கள் கேள்வி என்னவென்றால் ஆறாம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதற்கு என்ன காரணம்? ஏன் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே எடுக்கவில்லை?

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பொதுக்குழுவிலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இந்த அரசு முயற்சி செய்யும் என தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்னும் ஏன் தாமதம்? நீங்கள்தான் தும்பை விட்டு வாலைப் பிடித்துள்ளீர்கள்” எனத் தெரிவித்தார்.