Tamilnadu

“சுஜித்தின் தாய்க்கு அரசுப் பணி வழங்க பரிசீலனை” - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, நான்கு நாள் மீட்புப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

உயிரிழந்த சிறுவன் சுஜித்திற்கு இந்தியா முழுவதுமுள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். சிறுவன் சுஜித்தின் மறைவை அடுத்து, சுஜித்தின் பெற்றோரைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ், சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து, பல்வேறு கட்சியினரும் அரசு நிதி உதவி வழங்கவேண்டும் எனவும், சுஜித் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “திருச்சி மாவட்டத்தில் இருந்த பயன்பாட்டில் இல்லாத ஆள்துறைக் கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. வேறு ஏதேனும் ஆள்துளைக் கிணறுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் மூடப்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என அவரது கணவர் கோரிக்கை வைத்திருந்தார். கலாமேரி 12ம் வகுப்பு முடித்திருப்பதால், அவருக்குத் தகுந்த அரசுப் பணி வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.