Tamilnadu

“மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடித்துவைக்கவேண்டும்” - வைகோ வலியுறுத்தல்!

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பேச்சுவார்த்தை மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

பெருமாள் பிள்ளை, நீர் முகிப் அலி, பால மணிகண்டன், ரமா மற்றும் சுரேஷ் கோபால் ஆகிய ஐந்து மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர். இதில் சுரேஷ் கோபால், ரமா ஆகியோரின் உடல்நிலை மோசமான நிலையில் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவர்கள் பல மாதங்களாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து அவற்றை நிறைவேற்றக் கோரி வருகின்றனர். முக்கியமாக 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்கல்வி படிப்புகளான எம்.டி, எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்துவிட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றை மத்திய, மாநில அரசுகள் இதற்குக் காரணமாக காட்டுகின்றன.

கிராமப்புற மற்றும் பழங்குடியின, மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக 800 அரசு மருத்துவர் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விட்டதால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு படுக்கைகளையும், மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

2009 ஆம் ஆண்டில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதியம் தொடர்பாக 354/2009 என்ற விரிவான அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. இதில் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, பணி நியமனம், ஊதியம், தானாக முன்வந்து விலகுவதற்கான வழி முறைகள் ஆகியவை விரிவாக வகுக்கப்பட்டன. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அரசின் இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படாததால், அரசு மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பின்னர் தான் இவற்றை நிறைவேற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டத்தில் இறங்கினர். அப்போது தமிழக அரசின் சார்பில் 6 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் சுகாதாரத்துறை சார்பில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அரசு மருத்துவர்கள் போராடுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனாலும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைகள் மருத்துவர்களால் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் மருத்துவர்களின் சேவை தொடர்கிறது.

இந்நிலையில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கடந்த 21 ஆம் தேதியே தமிழக அரசுக்கு நான் வேண்டுகோள் வைத்திருந்தேன். அரசுத் தரப்பில் மருத்துவர்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் காட்டுவது பொதுமக்களுக்கு மருத்துவ சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே தமிழக அரசு உடனடியாக மருத்துவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முன்வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.